ஸ்டாலினின் வாட்ஸ் அப் குரூப்பினுள் எடப்பாடியாரின் உளவு நபர்கள்... வெளிப்பட்ட ரகசியம், வெடித்து எச்சரித்த உதயநிதி!

By vinoth kumarFirst Published Oct 20, 2018, 4:58 PM IST
Highlights

தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் தன் கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்காக ஒரு வாட்ஸ் அப் குரூப் நடத்திக் கொண்டிருக்கிறார். இதில் ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தங்கள் மாவட்டத்தில் நடக்கும் கழக நிகழ்வுகள், ஆளுங்கட்சி பற்றிய புகார்கள் ஆகியவற்றை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்.

தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் தன் கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்காக ஒரு வாட்ஸ் அப் குரூப் நடத்திக் கொண்டிருக்கிறார். இதில் ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தங்கள் மாவட்டத்தில் நடக்கும் கழக நிகழ்வுகள், ஆளுங்கட்சி பற்றிய புகார்கள் ஆகியவற்றை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். தலைமை கழகம் அறிவித்து, மாநிலம் முழுவதும் நடக்கும் ஆர்பாட்டங்களின் போட்டோக்களை உடனுக்குடன் அவர்கள் பதிவேற்ற, பயணத்தின் போதே அதை ஸ்டாலின் பார்த்துவிட்டு உத்தரவுகளை கொடுப்பார். 

இவை மட்டுமல்ல சில நேரங்களில் தன் மா.செ.க்களுக்காக ஸ்டாலின் கொடுக்கும் பிரத்யேக கட்டளைகளும் இதன் வழியேதான் நிர்வாகிகள ரீச் ஆகும். அதையும் தாண்டி அரிதாக ஆளுங்கட்சியின் ஊழல் அல்லது அமைச்சர்கள் செய்த முறைகேடுகள் பற்றிய ரகசிய தகவல்களையும் இதில் ஷேர் செய்து ‘இது பற்றி உங்கள் மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்வுகளில் பேசுங்கள்.’ என்பார், எந்த மாதிரியான வாக்கியங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வகுப்பெடுத்திருப்பார் அதில். சிம்பிளாக சொல்வதென்றால் அந்த வாட்ஸ் அப் குரூப்பானது இருபத்து நான்கு மணி நேரமும் ஸ்டாலின் நடத்தும் ஒரு உயர்மட்ட குழு விவாதம்! எனலாம். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக அமைச்சர் ஒருவர் ‘இந்த அரசை அசிங்கப்படுத்த ஸ்டாலின் எடுக்கும் முயற்சியை பாருங்கள். தன் கட்சி மாவட்ட செயலாளர்களை அரசுக்கு எதிராக இப்படியெல்லாம் தவறாக தூண்டிவிடுகிறார்.’ என்றெல்லாம் முழங்கிவிட்டார். ஸ்டாலினுக்கு இது பேரதிர்ச்சியை தந்தது. ஆனால் விட்டுவிட்டார். அதன் பிறகு ஸ்டாலின் தன் மா.செ. குரூப்பில் போடும் முக்கிய தகவல்கள் அனைத்துமே அ.தி.மு.க. முக்கியஸ்தர்களால் தொடர்ந்து வெளியில் போட்டு உடைக்கப்படுவது தொடர்கதையாகியது. இதன் பிறகு ஏக டென்ஷனாகிவிட்டார் ஸ்டாலின். ‘எப்படியோ நம் மா.செ. வாட்ஸ் அப் குரூப் தகவல்கள் வெளியே கசிகிறது.’ என்று மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.விடம் சொல்லியிருக்கிறார்.

 

மகேஷ் இதை அப்படியே உதயநிதிக்கு பாஸ் செய்திருக்கிறார். உடனடியாக உதயநிதி, ஸ்டாலினுக்காக இயங்கும் ‘நமக்கு நாமே’ டீமின் அட்மின்களை அழைத்துப் பேசினார். அவர்கள்,  தி.மு.க.வின் அத்தனை மாவட்ட செயலாளர்களின் மொபைல் எண்களையும் ஸ்கேன் செய்ய துவங்கினர். ஆனால் இந்த முயற்சி முழுமையாக முடியவில்லை. ஏதோ ஒரு மா.செ.வோ அல்லது சிலரோ கட்சி விஷயங்களை ஆளும் தரப்புக்கோ அல்லது உளவுத்துறை போலீஸுக்கோ தகவல் தருகிறார்கள், அது அப்படியே முதல்வர் எடப்பாடியாருக்கு முதலில் செல்கிறது, அதன் பின் அமைச்சர்களுக்கு பகிரப்படுகிறது   என்பதை தெளிவாக கண்டுபிடித்துவிட்டார்கள். இது உதயநிதியின் கவனத்துக்கு பாஸ் ஆனது. 

பின், மகேஷ் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் சிலரை அழைத்த  உதய் ’சீனியர், ஜூனியர்ன்னு வித்தியாசமில்லாம எல்லா மாவட்ட செயலாளர்களிடமும் சொல்லிடுங்க. இந்த போட்டுக் கொடுக்கிற பழக்கம் இனி வேண்டவே வேண்டாமுன்னு. ஆளுங்கட்சிக்கு பயந்தோ, அல்லது பயனடைஞ்சோதான் இந்த வேலையை அவங்க பார்க்கிறாங்க, இதை அப்படியே நிறுத்திக்கணுமுன்னு பொது அறிவிப்பு கொடுத்திடுங்க.” என்றதும் மகேஷ் எழுந்து ‘ஒருவேளை சில சீனியர் மா.செ.க்கள்  டச் ஸ்கிரீன் மொபைலை யூஸ் பண்ணுறதுக்கு கஷ்டப்பட்டு தங்களோட உதவியாளர்கள் கையில கொடுத்திருக்கலாம். அவங்க மூலமா கூட விஷயம் வெளியில் கசியலாம், இது அந்த மாவட்ட செயலாளருக்கு தெரியாம கூட இருக்கலாம்.” என்றாராம். 

உடனே சற்றே ஆக்ரோஷமாக “இது சரியான பாயிண்ட்தான், இப்படி நடக்கவும் வாய்ப்பிருக்குது. நான் நம்ம கட்சி மா.செ.க்களின் விசுவாசத்தில் சந்தேகம் வைக்கலை. ஆனா இன்னைக்கு சூழ்நிலை அப்படியிருக்குது.” என்றவர் பின், “ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்த தெரியாதவங்களுக்கு எதுக்கு மாவட்ட செயலாளர் பதவி?  போனை கையில வெச்சுக்க சங்கடமா இருந்தால் விலகி போக சொல்லுங்க.” என்று போட்டாராம் ஒரே போடாக. ப்பார்றா!

click me!