
தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் பேரவையில் பேசினார். “தமிழ்ச் சமுதாயம் ஏற்றம் பெற காரணமாக இருந்தவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர்தான். இவர்கள் நால்வரையும் தமிழ்ச் சமுதாயம் என்றும் நன்றியோடு நினைவுகூற வேண்டும். நவீன தமிழகத்துக்கு அடித்தளமிட்டவர்கள் இவர்களே. திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி ஒரு கொள்கைக் கூட்டணி. அதற்கு நோக்கம் உண்டு. அந்த வகையிலேயே இக்கூட்டணியை தமிழக மக்கள் ஆதரித்திருக்கிறார்கள்.
2019 மக்களவை தேர்தலில், இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டவர்தான் இன்றைய முதல்வர். அன்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்த கூட்ட அழைப்பிதழில் சோனியா காந்தி பெயர் மட்டுமே இருந்தது. அக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தில் அவரை வரவழைத்து, அவர் முன்பாக பிரகடனம் செய்த முதல்வரை காங்கிரஸார் நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறார்கள். அவருடைய தொலைநோக்கு பார்வையால்தான் 38 இடங்களிலும் மகத்தான வெற்றியை திமுக-காங்கிரஸ் கூட்டணி பெற்றது.
பாஜகவுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற நிலையை ஏற்படுத்திய பெருமை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உண்டு. வியூகம் வகுப்பதில் கருணாநிதி ஒரு சாணக்கியர். அவரையும் மிஞ்சும் வகையில் உங்களது வியூகம் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறது.” என்று ராஜேஷ்குமார் பேசினார்.