இப்படியா எடுபிடியாகவே செயல்பட வைக்கிறது? இதெல்லாம் கேடு கெட்ட செயல்... வேலுமணியை வெச்சு கிழிக்கும் ஸ்டாலின்

By sathish kFirst Published May 5, 2019, 10:45 AM IST
Highlights

எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்குத் தமிழகத்தில் ஒரு தனி மாநில தேர்தல் ஆணையம் தேவையா?” என்று கேட்டுள்ளார் முக ஸ்டாலின்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தொடர்பான பிரச்சினைகளை மக்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், “நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கச் சரியான ஆட்கள் இல்லை. போதிய நேரமும் இல்லை. வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க வேண்டியுள்ளதால் தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது” என்று கூறி தமிழக அரசு அவகாசம் கோரியது.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்குத் தமிழகத்தில் ஒரு தனி மாநில தேர்தல் ஆணையம் தேவையா?” என்று கேட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு 26.9.2016 அன்று மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 31-12-2016க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் அலட்சியம் காட்டிய ஆணைய அதிகாரிகள் மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் 18.9.2017க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, 17.11.2017க்குள் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்று மீண்டும் ஆணையிடப்பட்டது.

அந்த உத்தரவையும் மாநிலத் தேர்தல் ஆணையம் மதிக்கவில்லை. பிறகு, 31.8.2018க்குள் வார்டு வரையறைப் பணிகள் முடிந்து விடும். அதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் 2018 ஜூன் மாதத்தில் உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்தது. கடந்த ஜனவரி 2019இல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மே 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வாக்குறுதி அளித்தது மாநில தேர்தல் ஆணையம்.

இதையெல்லாம் பட்டியலிட்டுள்ள ஸ்டாலின், மாநிலத் தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மாறி மாறி பதில் மனுக்களைத் தாக்கல் செய்து ஒரு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை விளையாடுகிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இவ்வாறு தேர்தலை நடத்தக் கால அவகாசம் கேட்டுக்கொண்டே இருப்பது தோல்வி பயத்தின் உச்சக்கட்டம். உயர் நீதிமன்ற நீதிபதி அந்தஸ்து கொடுத்து ஒரு மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டால், அவரை தனது அரசுக்கு எடுபிடியாகவே செயல்பட வைப்பேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது, மாநிலத் தேர்தல் ஆணையர் பதவிக்குரிய கண்ணியத்தை சூறையாடும் கேடு கெட்ட செயல்.

அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், திடீர் பேரிடர்கள், வறட்சிகள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற உள்ளாட்சி நிர்வாகம் மிக முக்கியமானது. ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சரை ஊழலுக்கு மட்டுமே பயன்படுத்திட முடியும். டெண்டர்களில் கமிஷனை ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுக்கும் உள் நோக்கத்துடன்தான் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் நடத்தப்படுவதைத் திட்டமிட்டுத் தடுத்து வருகிறார். 

எனவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் அதிமுக அரசு தொடர்ந்து நடத்திவரும் ஒத்துழையாமை இயக்கத்தை மாநிலத் தேர்தல் ஆணையர் தானாகவே முன்வந்து உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தெரிவித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.

click me!