லாட்டரி மார்ட்டின் நிறுவன ஊழியர் மர்ம மரணம் !! வருமானவரித்துறை மீது வழக்கு பதிவு !!

By Selvanayagam PFirst Published May 4, 2019, 11:58 PM IST
Highlights

லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதையடுத்து, மர்மமான முறையில் காசாளர் பழனிசாமி இறந்தது தொடர்பாக வருமான வரித்துறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

கோவையில் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் 22 ஆண்டுகளாகக் காசாளராகப் பணியாற்றி வந்தவர் பழனிசாமி. 45 வயதான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். 

இவர் கோவை வெள்ளக்கிணறு, உருமாண்டபாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஏப்ரல் 30ஆம் தேதி முதல் கடந்த 4 நாட்களாக மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகள் என 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையின்போது மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரிகிறார் என்ற வகையில் பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்த விசாரணையின்போது பழனிசாமியிடம் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டதாகவும், இதனால் மனமுடைந்த அவர் அங்கிருந்த கத்தியை எடுத்து கை மணிக்கட்டுப் பகுதியை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வந்தன. மே 1 ஆம் தேதி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்றும் வருமான வரித் துறைகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவங்களால் மனமுடைந்து காணப்பட்டார் பழனிசாமி. இந்நிலையில் மே 3ஆம் தேதி காலை அலுவலகம் செல்வதாகக் கூறிவிட்டு லுங்கியுடன் வீட்டை விட்டுச் சென்றவர், மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள ஓடையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

காரமடை போலீசார் இவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மர்ம மரணம் தொடர்பாக குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே பழனிசாமியின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் காரமடை போலீசார் வருமான வரித் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!