சீன் காட்டும் மோடி..! மோடிக்கேற்ற தாடி..! புதுசா வந்த பி.ஆர்.ஓ..! எஸ்கேப் ஆன கைதி... என்னதான் ஆச்சு நம்ம ஸ்டாலினுக்கு..?

By Vishnu PriyaFirst Published Mar 7, 2019, 1:41 PM IST
Highlights

கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சியினரை தாக்கியும், விமர்சித்தும் பேசிட ஸ்டாலின் பயன்படுத்தும் வார்த்தைகள் மிக கூர்மையாக இருக்கின்றன என்று பொதுவான ஒரு கருத்து இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் எந்த திரையரங்குக்கு சென்றாலும், பொது இடத்தில் சிகரெட் புகைப்பதை கண்டிக்கும் நியூஸ் ரீல் ஒன்று காட்சியாகும். அதில் வரும் ‘என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு?’ எனும் டயலாக் செம்ம ஃபேமஸ். தேர்தல் பரபரப்பால் அரசியல் அல்லு தெறிக்கும் நிலையில் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலினுக்கு இந்த டயலாக்கை பொருத்திவிட்டு, ‘என்னதான் ஆச்சு நம்ம ஸ்டாலினுக்கு?’ என்று கிளப்பியிருக்கிறார்கள். இப்படி அதிர்ச்சி கலந்த ஆச்சரியப்பட்டு கேட்பதில் தி.மு.க. நிர்வாகிகளும் அடக்கம் என்பதுதான். 

ஹைலைட்டே! இந்த விமர்சனத்துக்கான காரணம் இதுதான்...

கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சியினரை தாக்கியும், விமர்சித்தும் பேசிட ஸ்டாலின் பயன்படுத்தும் வார்த்தைகள் மிக கூர்மையாக இருக்கின்றன என்று பொதுவான ஒரு கருத்து இருக்கிறது. தேர்தல் வைபரேஷன் துவங்கியதிலிருந்தே இப்படி பேசிக் கொண்டிருப்பவர், குறிப்பாக அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தபோது ‘சூடு, சொரணை இருக்கிறதா பா.ம.க.வுக்கு?’ என்று கேட்டது அதீத சேதாரம் தரக்கூடிய, வரம்பு மீறிய, வாய்த்துடுக்கான வார்த்தையாகவே பார்க்கப்பட்டது. இதனால் ராமதாஸ், அன்புமணி இருவரும் உள்ளபடியே காயப்பட்டனர்.

 

’தளபதி நீங்கள் இப்போது இளைஞரணியின் தலைவர் இல்லை, கழகத்துக்கே தலைவர். அதனால் வார்த்தையில் உஷ்ணத்தை குறைக்கலாமே?!’ என்று ஸ்டாலினை நெருங்கி நிற்கும் மிக முக்கிய நிர்வாகிகள் தயக்கத்துடன் கேட்டே விட்டனர். ஸ்டாலினின் குடும்பத்தினர்களோ உரிமையோடு ‘இனிமே இந்தளவுக்கு காரசாரமா பேசாதீங்க!’ என்று உத்தரவும் போட்டுவிட்டனர். ஆனால் எதையும் மனதில் ஏற்றும் நிலையில் ஸ்டாலின் இல்லை என்பதை நேற்று விருதுநகரில் அவர் கலந்து கொண்ட தி.மு.க. தென்மண்டல மாநாட்டு பேச்சு காட்டியது. 

விருதுநகரில் பட்டாசாய் வெடித்த ஸ்டாலினின் பேச்சுக்களில் ஹைலைட்டான சிலவை...

“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்திருப்பார் என்று மோடி இன்று சொன்னது அண்டபுளுகு, ஆகாசப்புளுகு. இப்படிப்பட்ட மோடி ஏன் இப்போது தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார்? கஜாவுக்கு வராதவர் இப்போது வரக்காரணம் தேர்தல்தான். 2014-க்குப் பின் இப்போதுதான் அடிக்கடி தமிழகத்துக்கு வந்து சீன் காட்டுகிறார்.  பதவியில் இருக்கும்போதே சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவை யாராலும் மறக்க முடியாது. இறந்துவிட்ட காரணத்தால் சிறை தண்டனையிலிருந்து தப்பிவிட்டார், இல்லையென்றால் சசிகலாவுடன் உள்ளே போயிருப்பார். 

இதையெல்லாம் மறைத்துப் பேசும் மோடிக்கு ஏற்றவராக, ஜாடிக்கேற்ற மூடி போல் மோடிகேற்ற தாடியாக இருக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. இப்பேர்ப்பட்ட பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் புதிய பி.ஆர்.ஓ. எனப்படும் மக்கள் தொடர்பு அதிகாரி போல் செயல்படுகிறார் ராமதாஸ். எந்த பழனிசாமி மீது அடுக்கடுக்காக ஊழல் பட்டியலை வாசித்து புத்தகம் போட்டாரோ, இப்போது அதே பழனிசாமியை வெறும் கூட்டணி ஆதாயத்துக்காக ஆகாயம் வரை புகழும் ராமதாஸ் ஒரு பி.ஆர்.ஓ.தானே!” என்று வெளுத்திருக்கிறார். தேர்தல் ஜூரம் ஏற ஏற அரசியல் சூடு உச்சம் தொடுவதுபோல் ஸ்டாலின் உதிர்க்கும் விமர்சன வார்த்தைகளும் உச்சம் தொடுகின்றன. இனிவரும் நாட்களில் சூழ்நிலை என்னாகுமோ! அதானே என்னதான் ஆச்சு நம்ம ஸ்டாலினுக்கு?

click me!