
ரேசன் கடைகளில் விநியோகம் செய்ய அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ ரூபாய் 143.50க்கு பருப்பு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் வெறும் ரூ.85.99க்கு கொள்முதல் செய்து சுமார் 115 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிச்சமாக்கியுள்ளார்.
தமிழகத்தில் ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு பருப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக ஆண்டு தோறும் டெண்டர் விடப்பட்டு மொத்தமாக பருப்பு கொள்முதல் செய்யப்படும். அந்த வகையில் ஆண்டுக்கு சுமார் 20ஆயிரம் டன் பருப்பு ரேசன் கடைகளுக்காக தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. இப்படி கொள்முதல் செய்யப்படும் பருப்புகள் ரேசன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கான டெண்டரில் விலை கோரப்படுவது தான் கடந்த அதிமுக ஆட்சியில் சர்ச்சையானது.
தற்போது திமுக ஆட்சியில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது பருப்பு டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே பங்குபெறும் வகையில் விதிகள் மாற்றப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதனால் அந்த நிறுவனம் மட்டுமே டெண்டரில் பங்கேற்று பருப்பு விநியோக உரிமையை பெற்றது. கடைசியாக தமிழகத்திற்கு 20ஆயிரம் டன் பருப்பு வழங்க ஒரு கிலோ பருப்புக்கு ரூ.143.50 என கிறிஸ்டி நிறுவனம் டெண்டர் கேட்டது. இந்த டெண்டர் ஏற்கப்பட்டு கிலோ ரூ.143.50 என்கிற விலையில் அதிமுக அரசு பருப்பு கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்தது.
இதே போல் கடந்த ஆண்டு கடைசியாக நடைபெற்ற பருப்பு டெண்டரிலும் இதே விலைக்குத்தான் கிறிஸ்டி நிறுவனம் டெண்டர் கோரியது. இந்த நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கடந்த அதிமுக ஆட்சியில் பருப்பு டெண்டருக்கு விதிக்கப்பட்ட கடுமையான விதிகள் தளர்த்தப்பட்டு சிறிய நிறுவனங்களும் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது. இதற்கு நீதிமன்றம் மூலம் வந்த தடையை தமிழக அரசு உடைத்து தற்போது டெண்டரை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது ஒரு கிலோ பருப்பை வெறும் 85.99 ரூபாய்க்கு வழங்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
டெண்டர் கோரப்பட்டதிலேயே சுமார் 20ஆயிரம் டன் பருப்பை கிலோவுக்கு ரூபாய் 85.99 என்கிற விலைக்கு வழங்க வந்துள்ள நிறுவனம் தான் மிகவும் குறைவான விலைக்கு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது, ஒரு கிலோவுக்கு கடந்த அதிமுக ஆட்சியை ஒப்பிடும் போது ரூ.57.50 குறைவாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.57 மிச்சமானால் 20ஆயிரம் டன்னுக்கு சுமார் 115 கோடி ரூபாய் மிச்சமாகும். இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.115 கோடி இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டெண்டர் முறைகேடு தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியை போல் கிறிஸ்டி நிறுவனத்திற்கே இந்த டெண்டர் கொடுக்கப்பட்டிருந்தால் கடந்த முறை ஆட்சியாளர்களை கவனித்ததை போல இந்த முறையும் திமுக ஆட்சியாளர்களையும் அந்த நிறுவனம் கவனித்திருக்கும். ஆனால் அதனை எல்லாம் தவிர்த்து மக்கள் வரிப்பணம் ரூ.115 கோடியை மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.