10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுவோரை விடுதலை செய்யுங்கள் முதல்வரே.. திருமாவளவன் கொடுத்த பயங்கர ஐடியா.

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2021, 10:34 AM IST
Highlights

திமுக தலைவர் மு. கருணாநிதி பிறந்த நாள் அன்று நெடுங்காலமாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

திமுக தலைவர் மு. கருணாநிதி பிறந்த நாள் அன்று நெடுங்காலமாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: ஜூன்-3  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாள்.  இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவரது கொள்கை வாரிசாக தமிழக முதல்வராக இருந்து திமுகவையும், தமிழக அரசையும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள். அரசியல் பகைவரும் அகம் நெகிழ்ந்து பாராட்டும் வகையில் அவர் இன்று ஆட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தலங்களில் மிகவும் சிறப்பாக திறம்பட செயல்பட்டு வருகிறார். 

கலைஞர் விட்டுச்சென்ற களப்பணிகள் மற்றும் கருத்தியல் சார்ந்த பணிகள் யாவற்றையும், இன்று போற்றுதலுக்கு உரிய வகையில் முன்னெடுத்துச் செல்கிறார். அத்தகைய பாராட்டுக்குரிய மாண்புமிகு முதல்வர் அவர்கள் மறைந்த கலைஞர் அவர்களுக்கு, மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூன் 3 அன்று பத்தாண்டுகளுக்கும் மேல் நெடுங்காலமாக சிறைப்பட்டு இருப்போர், அனைவரையும் மாந்த நேய அடிப்படையில் விடுதலை செய்ய முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். கொரோனா பெருந்தொற்று நெருக்கடிகளை கருத்தில் கொண்டு சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதனை ஏற்கனவே 7 தமிழர் விடுதலை குறித்த வேண்டுகோள் அறிக்கையிலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.  கலைஞர் அவர்கள் சிறைத்துறை நிர்வாக சீர்திருத்தம், சிறைவாசிகளின் நலன்கள், சிறைத்துறையினரின் உரிமைகள், போன்றவற்றில் முற்போக்கான பார்வையுடன் கூடிய அக்கறையுடன் சனநாயக அணுகுமுறைகளையும் கொண்டிருந்தவர். 

அவரது வழியில் ஆட்சி நிர்வாகத்தை  சிறப்புற நடத்திட வேண்டும் என்கிற பொறுப்புணர்வோடு இன்று இயங்கிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் தங்களின் தண்டனை காலத்தை கழித்துள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் வயது மூப்படைந்த, கடுமையான நோய்க்கு ஆட்பட்டோர், வழக்குகளை நடத்த பொருளாதார வலிமையன்றி பல ஆண்டுகளாக உள்ளேயே கிடக்கும் விசாரணை கைதிகள், பெண் கைதிகள் போன்றோரையும், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களையும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!