
நவ.6ம் தேதி, இரு வேறு நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, அப்படியே திமுக., தலைவர் கருணாநிதியையும் சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலம் குன்றி வீட்டில் இருக்கும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மோடி வந்த போது, தானும் வீட்டில் இல்லாமல் போய் விட்டோமே என்று வருத்தப் படுகிறார் மு.க.அழகிரி!
இதனை வெளிப்படையாகத் தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஒரு நன்றிக் கடிதமாக அனுபியுள்ளார் அழகிரி.
அந்தக் கடிதத்தில், என் பெற்றோரைப் பார்க்க வந்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டிய தங்களுக்கு நன்றி. தங்களது வருகை குறித்து எனக்கு எதுவும் விவரம் முன்னரே தெரியாது என்பதால், சென்னையில் தங்களை நேரில் வரவேற்க என்னால் இயலாமல் போனது.
என் பெற்றோர்களை தங்களுடன் வந்து தங்கியிருக்க தாங்கள் விடுத்த அழைப்பு, அவர்களின் ஆரோக்கியத்தில் புத்துணர்வு ஊட்டுவதாக அமையும்.
இந்த நாட்டை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதில் தங்களது பார்வையையும் அர்ப்பணிப்பையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன்...
- என்று கூறியுள்ளார்
இதன் மூலம், தாமும் அரசியலில் இன்னும் துடிப்புடன் இருப்பதைக் காட்டியுள்ளார் மு.க.அழகிரி.