
2ஜி அலைக்கற்றை வழக்கில், இன்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, தீர்ப்பு தேதியை வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். இன்னும் தீர்ப்பு தயாராகவில்லை என்று கூறியிருக்கிறார்.
சுமார் பத்து வருடங்கள் இழுத்துக் கொண்டு வந்துள்ளது இந்த வழக்கு. கடந்த 2007-2008ல் துவங்கிய 2ஜி அலைக்கற்றை விவகாரம், இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்த வழக்கில், ஒரு மனுதாரரான பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இதனை ஒட்டி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். இன்று இது பரபரப்பாகப் பேசப்பட்டது.
தீர்ப்பு தேதி குறித்து அறிவிப்பதே தாமதமாக இழுத்துக் கொண்டு செல்வது பற்றி கருத்து தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமி, தீர்ப்பு 10 ஆயிரம் பக்கங்களைக் கொண்டதாக இருப்பதால் அறிவிப்பு தாமதமாவதில் தவறில்லை. 2ஜி வழக்கில் ஆ.ராசாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வேன் என்று கூறினார். இதிலிருந்து, இந்த வழக்கில் ஆ.ராசாவுக்கு சாதகமாக தீர்ப்பு வரக்கூடும் என்ற விதத்தில், நம்பிக்கையின்மை சு.சுவாமியிடம் தெரிகிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சுப்பிரமணிய சுவாமி அடிக்கடி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வழக்குகள் குறித்தும் ப.சிதம்பரம் பற்றியும் கருத்தைப் பதிவு செய்வார். இன்றும் அப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்து சிபிஐ ஏன் தடுத்து வருகிறது என்பது பற்றி அறிய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
இந்த வாசகங்களில் அவர் ப.சிதம்பரத்தை பிசி PC என்பதாகவும், அதாவது பப்பா சோர் (அப்பா திருடன்) என்றும், கார்த்தி சிதம்பரத்தை BC என்று பேட்டா சோர் (மகன் திருடன்) என்பதாகவும் பதிவு செய்து சீண்டுவார். இப்படி இன்றும் ஒரு பதிவிட்டு, இந்த விவகாரத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது பற்றி, வரும் டிசம்பர் 1 ஆம் தேதிக்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்திடம் செல்வேன் என்றும் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்திடம் சுவாமி அப்பீல் செய்வார் என்று ஓர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நான் சொன்னது, எந்த விதமான தீர்ப்பு குறித்தும் கவலையில்லை, வழக்கில் தோல்வியை சந்திப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார்கள் என்றேன்... என்று குறிப்பிட்டுள்ளார்.
சுப்பிரமணியம் சுவாமியின் அதிரடி அரசியல் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தில்லி வட்டாரத்தில் எப்போதும் ஒரு கலக்கு கலக்கும். இந்த விவகாரத்தில் அவரது அதிரடிகளை தில்லி அரசியல்வாதிகள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்.