களத்திற்கு வந்த மு.க.அழகிரி... தென் மாவட்ட குடைச்சல்.. சமாளிப்பாரா மு.க.ஸ்டாலின்..!

By Selva KathirFirst Published Dec 2, 2020, 10:37 AM IST
Highlights

கலைஞர் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சென்னையில் பேரணிக்கு ஏற்பாடு செய்தது போன்ற ஒரு தவறை இந்த முறை செய்யக்கூடாது மதுரையில் கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்கிற முடிவிற்கு மு.க.அழகிரி வந்துள்ளார்.

கலைஞர் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சென்னையில் பேரணிக்கு ஏற்பாடு செய்தது போன்ற ஒரு தவறை இந்த முறை செய்யக்கூடாது மதுரையில் கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்ட வேண்டும் என்கிற முடிவிற்கு மு.க.அழகிரி வந்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஒதுங்கியிருந்த அழகிரி சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் அப்படி இருக்கமாட்டார் என்பதை ஏசியாநெட் தமிழ் கடந்த சில மாதங்களாகவே கூறி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சட்டப்பேரவை தேர்தலில் தனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று கூறி அதிரடி அரசியலை ஆரம்பித்துள்ளார் மு.க.அழகிரி. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. அதன் பிறகு திமுகவில் இணைய அவர் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

கலைஞர் மறைந்த பிறகு மூத்த மகனாக அழகிரி செய்ய வேண்டிய கடமைகளை கூட அவரால் செய்ய முடியவில்லை. கலைஞர் மறைவிற்கு பிறகாவது கட்சியில் தனக்கான முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அழகிரி எதிர்பார்த்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் அனுமதிப்பது ஆபத்து என்று கருதி அந்த விஷயத்தில் உஷாராகவே இருந்தார். கலைஞர் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தனது ஆதரவாளர்களை கூட்டி அழகிரி தனது பலத்தை காட்ட முயற்சித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் கூடவில்லை.

இதன் பிறகு மு.க.அழகிரி கிட்டத்தட்ட அரசியல் துறவரம் சென்றுவிட்டார் என்றே கூற வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அழகிரி பதுங்கியது சட்டப்பேரவை தேர்தலில் பாயத்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகிவிடக்கூடாது என்பது தான் அழகிரியின் செயல்திட்டம் என்கிறார்கள். இதே போன்று திமுக மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் தற்போது அழகிரியை பின்னால் இருந்து இயக்குவதாகவும் சொல்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடைக்கானலில் பாஜக முக்கிய புள்ளி ஒருவர் அழகிரியை சந்தித்து பேசினார்.

பாஜகவில் இணையுமாறு அந்த புள்ளி வலியுறுத்திய நிலையில் தான் ஏற்கனவே எம்பி, மத்திய அமைச்சர் பதவி உள்ளிட்ட அனைத்தையும் பார்த்துவிட்டதாகவும் தனக்கு அதில் தற்போது எந்த விருப்பமும் இல்லை என்பதை அழகிரி திட்டவட்டமாக அந்த பாஜக புள்ளியிடம் கூறியுள்ளார். அதே சமயம் அரசியலில் இருந்து விலகும் முடிவிலும் தான் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்து மு.க.ஸ்டாலினை முதலமைச்சராகாமல் தடுப்பது தான் தனது நோக்கம் என்று அழகிரி அப்போது எடுத்துரைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

இதன் அடிப்படையில் தான் தற்போது பாஜக பின்னால் இருந்து இயக்க திமுகவிற்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்க அழகிரி திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். அடுத்த மாதம் மு.க.அழகிரியின் பிறந்த நாள் வருகிறது. அந்த சமயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி குறித்து பல்வேறு பகீர் புகார்களை கூறி தமிழக அரசியல் களத்தை அதிர வைக்க அழகிரி திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதே போல் அன்றைய தினம் தனது ஆதரவாளர்கள் அனைவரையும் மதுரைக்கு அழைத்து தென் மாவட்டங்களில் தற்போதும் தான் கிங் என்பதை காட்டவும் அழகிரி தயாராவதாக சொல்கிறார்கள்.

மேலும் தென் மாவட்டங்களில் திமுகவின் கட்டமைப்பு மு.க.அழகிரிக்கு மிக நன்றாக தெரியும். அங்கு தற்போது திமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் தொடங்கி வேட்பாளர்களாகும் வாய்ப்பு உள்ளவர்கள் வரை அனைவருமே ஒரு காலத்தில் மு.க.அழகிரி ஆதரவாளர்களாக இருந்தவர்கள். எனவே அவர்களின் வரவு செலவு தொடங்கி அவர்கள் எங்கு வருவார்கள், எங்கு செல்வார்கள் என்பதும் அழகிரிக்கு அத்துப்படி என்கிறார்கள். இவற்றை எல்லாம் வைத்து தென் மாவட்டங்களில் திமுகவிற்கு குடைச்சல் கொடுத்து அதிமுக கூட்டணிக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்துவது தான் அழகிரியின் பிளானாம். இதனை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

click me!