அம்மாவை கூட்டிட்டுவாங்க! அப்பா வெயிட் பண்ணுவார்! குடும்பத்தினரை நெகிழ வைத்த மு.க.அழகிரி!

First Published Aug 7, 2018, 10:35 AM IST
Highlights

கடந்த 11 நாட்களாக கலைஞர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல் முறையாக அவரது மனைவி தயாளு அம்மாள் நேரில் சென்று சந்தித்து திரும்பியுள்ளார்.

கடந்த 11 நாட்களாக கலைஞர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல் முறையாக அவரது மனைவி தயாளு அம்மாள் நேரில் சென்று சந்தித்து திரும்பியுள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கடந்த சில வருடங்களாக ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் தன்னை சுற்றி என்ன நடக்கிறத என்பதை கூட உணர முடியாது என்கிறார்கள். மேலும் அவ்வளவாக தயாளு அம்மாவால் யாரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்றும் கூறப்படுகிறது. இதனால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் தயாளு அம்மாள் திடீரென நேற்று பிற்பகல் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். 

தயாளு அம்மாளின் மகன் மு.க.தமிழரசு, அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் கோபாலபுரத்தில் இருந்து கலைஞரின் சக்கர நாற்காலியில் அமர வைத்து, கலைஞரின் காரிலேயே தயாளு அம்மாவை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து நேற்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் தயாளு அம்மாள் அங்கு வந்து சேர்ந்தார். நேராக கலைஞர் இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு தயாளு அம்மாள் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சென்று கலைஞரை பார்த்த தயாளு அம்மாள் எதுவும் பேசாமல் மிகுந்த அமைதியுடன் அமர்ந்திருந்தார். அப்போது தயாளு அம்மாவின் கைகளை எடுத்து கலைஞரின் கைகளை பற்றிக் கொள்ள வைத்துள்ளார் அவர்களின் மகன் மு.க.அழகிரி. இதனை பார்த்து சுற்றி நின்று கொண்டிருந்த நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் நெகிழ்ந்து போயினர்.

கலைஞர் உடல் நிலை கவலைக்கிடம், 24 மணி நேரத்திற்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் சொன்னதால் தனது தாய் தயாளு அம்மாவை அழைத்து வந்து அவரது கணவரை பார்க்க வைத்துவிட வேண்டும் என்று அழகிரி எடுத்த முடிவே அங்கு தயாளு அம்மாவை வரவழைத்துள்ளது. ஆனால் அழகிரி தயாளு அம்மாவை அழைத்துவரும் படி சொன்ன போது, மு.க.தமிழரசு தயங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்பா காத்துக் கொண்டிருப்பார் அழைத்து வாருங்கள் என்ற அழகிரி தனது மகனையும் உடன் அனுப்பி வைத்துள்ளார்.

click me!