மாணவர்களுக்கும் , மீனவர்களுக்கும் சட்டமன்றத்தில் குரல்கொடுத்த அன்சாரி..!! பொறுப்பாக பதில் சொன்ன அமைச்சர்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 19, 2020, 3:24 PM IST
Highlights

 "கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் விசாகப்பட்டினம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தகுந்த மருத்துவ சோதனை, சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்புவார் என்றும் கூறினார்.

ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க மத்திய அரசிடம்  பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், பிலிபைன்ஸ் நாட்டில் உள்ள தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டு விசாகபட்டினம் அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் அமைச்சர்  ஆர்பி. உதயகுமார் தகவல்  தெரிவித்துள்ளார். மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த  அமைச்சர் இவ்வாறு கூறினார்.  இன்று சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர்  மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அவர்கள்,  விதி 55 ன் கீழ், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை  கொண்டு வந்து பேசினார். 

கொரோனோ வைரஸ் உலகின் பல நாடுகளை பாதித்தது போல்  ஆசியான் எனப்படும்   தென்கிழக்கு ஆசிய  நாடுகளையும் பாதித்திருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக சிங்கப்பூர் மலேசியா எல்லை மூடப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ்க்கு மருத்துவம் படிக்க  சென்ற தமிழக மாணவர்கள்  நேரடி விமான சேவை இல்லாததால் நாடு திரும்பும் வழியில், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவிப்பதாக சமூக இணையதளங்கள் வழியாக அறிகிறோம். அவர்களுக்கு அங்கு விமான நிலையத்தில் தங்க பாதுகாப்பான ஏற்பாடுகளை நமது இந்திய வெளியுறவுத்துறை செய்திருக்கிறதா? 

இதுகுறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி இருக்கிறதா ? என்பதை அறிய விரும்புகிறேன். அதுபோல் நாகப்பட்டினம் , கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் ஈரான் நாட்டு கடல் எல்லையில் சிக்கித் தவிப்பதாக அறிகிறோம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா ?அவர்கள்  குடும்பத்தினருக்கு உரிய தகவல் சொல்லப்பட்டிருக்கிறதா? என்பதையும் தங்கள் வாயிலாக அரசிடம் கேட்டு அமர்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 இதே கேள்வியையொட்டி  பேசிய உறுப்பினர்கள் ஆஸ்டின், பிரின்ஸ் ஆகியோருக்கும் சேர்த்து பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள்,   "கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் விசாகப்பட்டினம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தகுந்த மருத்துவ சோதனை, சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்புவார் என்றும் கூறினார். ஈரான் நாட்டு கடல் எல்லையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்பது குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் பதில் அளித்தார்.
 

click me!