
சசிகலா குடும்பத்தை வெளியேற்றும் வகையில், தங்கமணி வீட்டில் திங்கள் கிழமை இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில், பெரும்பாலான அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதையடுத்து, தளவாய் சுந்தரம், எடப்பாடியின் நெருங்கிய நண்பர் சேலம் இளங்கோவன், எம்.எல்.ஏ வெற்றிவேல் ஆகியோருடன் தினகரன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
அப்போது பேசிய அவர், என்ன நினைத்துக் கொண்டு இவர்கள் இப்படி ஆட்டம் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த கட்சியை அழிக்க, பாஜகவின் அடியாள் போல பன்னீர் செயல் படுகிறார் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதே பன்னீர்தான், அவரோடு சேர்ந்து கொண்டு இரண்டு அமைச்சர்களும் ஆட்டம் போடுகிறார்கள்.
மறுபக்கம், இரட்டை இலை சின்னத்தை வாங்க நாம் பணம் கொடுத்ததாக, பாஜக பொய் செய்தி பரப்புகிறது.
இது அனைத்துக்கும் காரணமான பன்னீரிடம் கெஞ்சி, கூத்தாடி சமாதானமாக போவதை விட, தேர்தலை சந்திப்பதே மேல் என்று மிகவும் வருத்தப்பட்டு கூறி இருக்கிறார் தினகரன்.
அதன் பிறகே, செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், நாங்கள் 122 பேர் இருக்கிறோம், 12 எம்.எல்.ஏ க்களிடம் போய் நாங்கள் சமாதானம் பேச வேண்டுமா? என்று பொரிந்து தள்ளி இருக்கிறார்.
வெற்றிவேலின் பேச்சை அடுத்து, அவர்கள் பக்கம் எத்தனை எம்.எல்.ஏ க்கள் போவார்கள் என்று லிஸ்ட் தயாரித்துள்ளனர் அமைச்சர்கள்.
அதன் பின்னர், அவர்கள் போனால் போகட்டும், மற்றவர்களை வைத்துக் கொண்டு, ஆட்சி கலையாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது, நமது பொறுப்பு என்று உறுதி ஏற்றுள்ளனர் அமைச்சர்கள்.