
தமிழ் புத்தாண்டு தினத்தன்று, தினகரனை துணை பொது செயலாளர் பதவியில் இருந்து விலக சொல்லி ஷாக் கொடுத்தார் அமைச்சர் வேலுமணி.
அடுத்த சில தினங்களில், அமைச்சர் வேலுமணியும், தங்கமணியும் சேர்ந்து, பன்னீர் தரப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது அண்ணன் பன்னீருக்கு உங்கள் மீது எல்லாம் துளி கூட கோபம் இல்லை. அவரை பொறுத்தவரை, சசிகலா குடும்பத்தின் மீதுதான் கோபமாக இருக்கிறார் என்று பன்னீர் ஆதரவாளர் கூறி இருக்கிறார்.
ஜெயலலிதா இருக்கும் வரை, சசிகலா நம்மை எல்லாம் எப்படி ஆட்டி படைத்தார். அந்த வேலையை இப்போது தினகரன் செய்து வருகிறார்.
எனவே, கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பம் ஆதிக்கம் செலுத்தும் வரை, நமக்கு அடிமை வாழ்வில் இருந்து விடுதலை கிடையாது.
அந்த அடிமை தனத்தை ஒழிக்கவே, சசிகலா குடும்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று பன்னீர் போராடி வருகிறார்.
இதே நிலை இன்னும் தொடர்ந்தால், ஆட்சியை கவிழ்க்க வெளியில் இருந்து யாரும் வரவேண்டிய அவசியம் இல்லை. தினகரனும், விஜயபாஸ்கருமே அதை செய்து விடுவார்கள் என்றும் நயமாக எடுத்துக் கூறி இருக்கிறார் பன்னீர் ஆதரவாளர்.
சசிகலாவும், தினகரனும் கட்சியில் இருக்கும் வரை, அடிமைத்தனம் ஒழிய சாத்தியம் இல்லை. எனவே, நீங்கள் அவர்களை வெளியேற்றுங்கள், நாங்கள் உங்களுடன் இணைந்து விடுகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதை, அமைச்சர்கள் சந்திப்பில் அமைச்சர் வேலுமணி வெளிப்படையாக பேசியதும், மற்ற அமைச்சர்கள் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகே, வேலுமணியும், தங்கமணியும் நேரடியாக பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசி உள்ளனர். அப்போது சசிகலா குடும்பத்தை வெளியில் அனுப்பினால், நாம் ஒன்றிணைவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று பன்னீரும் கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, அமைச்சர் தங்கமணி வீட்டில் திங்கள் கிழமை இரவு அமைச்சர்கள் கூட்டம் நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ க்களை தங்கள் பக்கம் இழுக்க ஏற்பாடு செய்து விட்டனர்.
என்னதான் தினகரன் தரப்பு முட்டுக்கட்டை போட்டாலும், சசிகலாவையும், தினகரனையும் வெளியேற்றுவதில், பெருமளவிலான அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும் ஒற்றுமையாக உள்ளனர் என்பது உறுதியாகி விட்டது.