"நமது எம்.ஜி.ஆர்" ஐ மறந்த அதிமுக அமைச்சர்கள் - ஊழியர்களுக்கு விவேக் போட்ட உத்தரவு!

First Published May 4, 2017, 10:59 AM IST
Highlights
ministers forget namadhu mgr newspaper


ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு அதிகாரபூர்வ நாளேடு உண்டு. குறிப்பாக திராவிட இயக்கத்தின் முன்னோடியான, நீதி கட்சி காலத்தில் இருந்தே, கட்சியின் கொள்கைகள், கருத்துக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை விளக்க அது அவசியமான ஒன்றாக கருதப்பட்டு வந்தது.

தென்னிந்திய நல உரிமை கழகம் என்று தொடங்கப்பட்ட அமைப்பின் சார்பில் நீதி என பொருள்படும்  "ஜஸ்டிஸ்" என்ற பத்திரிக்கை நடத்தப்பட்டது. அதன் காரணமாக, தென்னிந்திய நல உரிமை கழகமே, பின்னாளில் "நீதி கட்சி" யாக மாறியது. 

நீதி கட்சியின் அடுத்த பரிணாம வளர்ச்சியான, பெரியாரின் திராவிடர் கழகத்தின் சார்பில் "விடுதலை" என்ற இதழ் தொடங்கப்பட்டது. அதுவே இன்றும் வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்த அண்ணாவால் "நம் நாடு" என்ற நாளேடு தொடங்கப்பட்டு, அவர் இருக்கும் வரை அது நடத்தப்பட்டு வந்தது. அண்ணா மறைவுக்கு பின்னர், கருணாநிதி ஏற்கனவே நடத்தி வந்த "முரசொலி" இன்று வரை திமுகவின் அதிகாரபூர்வ நாளேடாக உள்ளது.

திமுகவில் இருந்து பிரிந்து தனியே கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர், அண்ணா என்ற நாளேட்டை தொடர்ந்து நடத்தி வந்தார். அவர் மறைவுக்கு பின்னர், அதிமுக பொது செயலாளரான ஜெயலலிதா "நமது எம்.ஜி.ஆர்" என்ற நாளேட்டை தொடங்கினார். அதனால், இன்றுவரை அதிமுகவின் அதிகாரப்பூரவ நாளேடாக விளங்குவது "நமது எம்.ஜி.ஆர்".

ஜெயலலிதா இருந்தவரை, அமைச்சர்கள் சார்பில் குறைந்த பட்சம், பத்து பக்கம் வரை அதில் அதிமுக விளம்பரங்கள் இருக்கும். முக்கியமான நேரங்களில் 80 பக்கங்கள் வரை கூட விளம்பரங்கள் இடம் பெற்றதுண்டு.

ஜெயலலிதாவின், மறைவுக்கு பின்னர் அதன் நிர்வாகம் அனைத்தும், சசிகலாவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதனால், அவர் சிறை செல்லும் வரையிலும் நமது எம்.ஜி.ஆரில் விளம்பரங்களுக்கு குறை இல்லை. 

ஆனால், அமைச்சர்கள் அனைவரும் தற்போது சசிகலாவுக்கு எதிராக திரும்பி உள்ளதால், அவர்கள் அனைவரும், நமது எம்.ஜி.ஆர் நாளேட்டுக்கு விளம்பரம் கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.

இருந்த போதும், நமது எம்.ஜி.ஆர் ஊழியர்கள், அமைச்சர்களை தொடர்பு கொண்டு விளம்பரம் கேட்டாலும், இப்போது வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிடுவதாக சொல்லப்படுகிறது.

இதை அறிந்த இளவரசியின் மகன் விவேக், யாரும் அமைச்சர்களை தொடர்பு கொண்டு நமது எம்.ஜி.யாருக்காக விளம்பரம் கேட்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும் வரை, அரசு சம்பந்தப்பட்ட செய்திகள், முதல்வர் அறிக்கை, அரசு விழாக்கள் என அனைத்துக்கும் எப்போதும் போல, முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுங்கள் என்றும் அவர் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியும், கட்சியும் தங்கள் பக்கம்தான்  இருக்கிறது என்பதை காட்டி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதன் காரணமாகவே, விவேக் அவ்வாறு உத்தரவிட்டுள்ளார் என்று நமது எம்.ஜி.ஆர் ஊழியர்கள் பேசிக்கொள்வதாக தகவல்.

எப்படி பார்த்தாலும், எம்.ஜி.ஆர் உருவாக்கிய நமது எம்.ஜி.ஆரை, அவரது தம்பிகளான அமைச்சர்கள் மறக்கலாமா? என்பதுதான் அதிமுக தொண்டர்களின் தற்போதைய கேள்வியாக உள்ளது.

click me!