உயிர் காக்கும் நேரத்திலும் மிச்சம் வைக்காமல் ஆட்டையைபோடும் அதிமுக.. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு KN.நேரு பதிலடி.!

By vinoth kumarFirst Published Apr 21, 2020, 11:24 AM IST
Highlights

மாலை நேரக் கச்சேரியில் இன்றைய பாடகர் யார் என்பது போல, கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அறிவிப்பு என்ற பெயரில், ஆளும் அதிமுகவினர் போட்டிப் போட்டுக் கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். 

எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதற்கு திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு  பதிலடி கொடுத்துள்ளார். 

நேற்று மாலை சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள் பாதுகாப்பில் அரசு அலட்சியமாக உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டதை குறித்த கேள்விக்கு ரேபிட் கிட் விவகாரம், மருத்துவர் மரணம் இரண்டிலும் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்கிறார் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு சில மணி நேரத்தில் திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாலை நேரக் கச்சேரியில் இன்றைய பாடகர் யார் என்பது போல, கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அறிவிப்பு என்ற பெயரில், ஆளும் அதிமுகவினர் போட்டிப் போட்டுக் கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் என இந்த விளம்பர வேட்கை தொடர்கிறது. கொரோனா வைரஸ் தனது வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று நாளில் கொரோனா ஒழிந்துவிடும் என ‘டாக்டர்’ எடப்பாடி பழனிசாமி அறிவித்த நான்காவது நாளிலும், கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருப்பதையும், உயிரிழப்பும் ஏற்பட்டிருப்பதையும், மாலை நேரக் கச்சேரியின் பாகவதரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கொரோனா நோய்த் தொற்று அபாயத்தைத் தொடக்கம் முதலே வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தக் கோரி வருபவர் திமுக தலைவர். மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கான பாதுகாப்புக் கவசங்கள் - மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் போதுமான அளவில் இருக்கிறதா என்பது குறித்து பொறுப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவராக அவர் எழுப்பும் கேள்விகளின் நியாயத்தைப் பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். உண்மையாகவே இவையெல்லாம் இருக்கிறது என்றால், அமைச்சர் விஜயபாஸ்கர் நிதானமாகப் பதில் சொல்லியிருக்க வேண்டும். உரிய பதில் இல்லாத காரணத்தால், திமுக தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாக கோபம் கக்கியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

எது மலிவான அரசியல்?

இந்தியப் பிரதமரும் அருகிலுள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும் நடத்தியது போல அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும்படி வலியுறுத்துவது மலிவான அரசியலா? - அரசு அலட்சியப்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தை அனுமதிக்க மறுப்பது மலிவான அரசியலா? ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதும் - பாதுகாப்புக் கவசங்கள் வழங்குவதும் மலிவான அரசியலா? அல்லது, இத்தகைய உதவிகளைச் செய்யத் தடை விதிப்பது மலிவான அரசியலா? மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்களே கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாவதால் மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாக்கவும், ஊரடங்கிலும் அயராது கடமையாற்றும் காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்தினர் நலன் காக்கவும் வலியுறுத்துவது மலிவான அரசியலா?

மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தும், காவல்துறையினர் - ஊடகத்தினர் உள்ளிட்டோர் நோய்த் தொற்றுக்குள்ளாகி வரும் நிலையில் உரிய சிகிச்சைகளுக்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யாமல் எதிர்க்கட்சிகள் மீது கோபம் காட்டுவது மலிவான அரசியலா? எத்தனை லட்சம் விரைவு பரிசோதனைக் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டன?; அவற்றில் எத்தனை தமிழகத்திற்கு வந்தன? தாமதத்திற்குக் காரணம் என்ன? பாதுகாப்பு உபகரணங்கள் - பரிசோதனைக் கருவிகள் குறித்து முதல்வர் சொல்வதற்கும் சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வதற்கும் உள்ள வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்று எதிர்க்கட்சி மட்டுமல்ல, உங்களின் மாலை நேர அறிவிப்புக் கச்சேரிகளில் உள்ள அரசியலை உற்றுக் கவனித்துவரும் பொதுமக்களும் கேட்கிறார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்திற்கான விரைவு பரிசோதனைக் கருவிகள் ரூ.337 + ஜி.எஸ்.டி. என்ற வகையில் ரூ.377.44-க்கு வாங்கப்பட்டிருப்பதை அம்மாநில அமைச்சர் வெளிப்படையாக ட்வீட் செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் வாங்கப்பட்ட கருவிகளின் விலை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவரான திமுக தலைவர் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியை, அமைச்சரின் மாலை நேர அறிவிப்புக் கச்சேரியில் ஊடகத்தினர் கேட்டனர். கடைசிவரை நேரடி பதில் சொல்ல அமைச்சரால் முடியவில்லை. பிறகு, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் இயக்குநர் உமாநாத் வெளியிட்ட கொள்முதல் உத்தரவு நகல் மூலம் தமிழகத்தில் விரைவு பரிசோதனைக் கருவி ரூ.600 + ஜி.எஸ்.டி. என ரூ.672 ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பது தெரிந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தைவிட ரூ.294.56 கூடுதல் விலைக்கு தமிழகம் வாங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது. Shan Biotech and Diagnostics நிறுவனம் மூலம் கொள்முதல் ஆர்டர் தரப்பட்டுள்ள 50 ஆயிரம் விரைவுப் பரிசோதனைக் கருவிகளைக் கணக்கிட்டால் 1 கோடியே 47 லட்ச ரூபாய் கூடுதல் விலையில் வாங்கப்பட்டுள்ளது. கூடுதல் விலை கொடுத்து வாங்கியதன் பின்னணி என்ன என்பதுதான் திமுகவும் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் எழுப்புகின்ற கேள்வி. குட்கா விற்பனைக்கு அனுமதி வழங்கியது முதல் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அமைச்சரும் ஆளுந்தரப்பினரும் லாப நோக்கத்துடன் செயல்பட்டது ஆதாரபூர்வமாக தெரியவந்து, வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா காலத்திலும் ஊழல் ஒன்றே நோக்கமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்படுவதை அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல பொதுநல அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. கிராமங்களுக்கு பைஃபர் ஆப்டிக் மூலம் இணையதளம் செயல்படுத்தும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறையின் டெண்டரில் ரூ.2000 கோடிக்கு மேல் செட்டிங் மற்றும் ஊழல் நடப்பதையும் அதற்கு ஒத்துழைக்க மறுத்து, வெளிப்படைத்தன்மையை வலியுறுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபுவை இடமாற்றம் செய்து பழிவாங்கியதையும் புகாராகப் பதிவு செய்துள்ளனர்.

பேரிடர் காலத்திலும் மக்கள் நலனில் அக்கறையின்றி, மிச்சமிருக்கும் காலத்தில் மிச்சம் வைக்காமல் எதை எதை எப்படியெல்லாம் கொள்ளையடிக்கலாம் என்கிற ஊழல் திட்டத்தில் மட்டுமே மும்முரமாக இருப்பதுதான் மலிவான அரசியல் என்பதை அமைச்சருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தேவையின்றி எங்கள் தலைவர் மீது உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாம். நீங்கள் விளம்பரம் தேட நினைக்கும் ஊடக வெளிச்சத்தின் வாயிலாக மக்களுக்கு நியாயத்தைச் சொல்லுங்கள். அதற்கான நேர்மை இல்லை என்றால் அமைதியாக இருங்கள். தேவையின்றி சீண்ட வேண்டாம். கொரோனா காலத்திலும் கொடிய ஊழல்களில் சிக்கியிருக்கும் தமிழகத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான இயக்கம் ஜனநாயக வழியில் விரைவில் மீட்டெடுக்கும். அப்போது அதிமுக ஆட்சியின் ஊழல் நிறைந்த மலிவான செயல்பாடுகள் அனைத்திற்கும் நீதியின் முன் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

click me!