
அமைச்சர் வேலுமணி, எடப்பாடி குழுவில் இருந்தாலும், அவருக்கும் இவருக்கும் எப்போதுமே ஒத்து வராது. இருந்தாலும் வேறு வழியில்லாமல், தங்கமணி மீதுள்ள அபிமானத்தால் எடப்பாடி அணியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டாலும், பன்னீர் குழுவில் இருந்து முனுசாமி, பொன்னையன், செம்மலை ஆகியோரும், எடப்பாடி குழுவில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர்தான் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு தரப்பிலும், கொங்கு கவுண்டர் மற்றும் வன்னிய கவுண்டர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இருந்தாலும், இரு அணிகளையும் எப்படியாவது இணைத்து விட வேண்டும் என்று இரு தரப்புமே உறுதியாக இருக்கிறது.
முதல்வர் பதவி சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டுமே இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது. முதல்வர் பதவியில் எடப்பாடி இருந்துவிட்டு போகட்டுமே என்று ஜெயக்குமார் கூறுகிறார்.
ஆனால், எடப்பாடி என்பது சசிகலாவின் தேர்வு. அவர் பணம் வசூலித்து கொடுத்தார் என்பதற்காகவே முதலமைச்சர் ஆக்கப்பட்டு இருக்கிறார். மேலும், சேலம் மாவட்டத்திலேயே அவருக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது.
அத்துடன், மற்ற நிர்வாகிகளை ஒப்பிடும்போது, கட்சியில் அவர் ஜூனியர்தான். எனவே, பன்னீர்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று, முனுசாமி தரப்பு அடம் பிடிக்கிறது.
இதை எல்லாம் பார்த்த அமைச்சர் வேலுமணி, கட்சி ஒன்று படுவதற்காக, எடப்பாடி தனது முதல்வர் பதவியை விட்டு கொடுத்தால் தவறு இல்லை என்று வெளிப்படையாகவே கூறி வருகிறார்.
எடப்பாடி, சரியான தேர்வு இல்லை என்பது உண்மைதான், ஆனாலும் அடிக்கடி முதல்வரை மாற்றுவது அவ்வளவு நல்லதல்ல. ஒரு ஆறு மாதம் போகட்டும், அதற்கு பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார்.
சசிகலா குடும்பத்தை நீக்குவது என்று முடிவெடுத்த பின்னர், அவர் விட்டு சென்ற எடப்பாடியை மட்டும் ஏன் கட்டிக்கொண்டு அழவேண்டும். நீங்கள் யாரை சொல்கிறீர்களா, அவரை துணை முதல்வராக போடலாம் என்று சொல்லி இருக்கிறது பன்னீர் தரப்பு.
இதனால், அணிகள் இணைப்பு பற்றிய பேச்சு வார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதே இப்போதைய நிலை.