8 லட்சம் குடும்பங்களுக்கு 28 பொருட்கள்..! கோவையை மிரட்டும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!

By Manikandan S R SFirst Published May 12, 2020, 2:43 PM IST
Highlights

மாநகராட்சி ஊழியர்கள் 1000 பேருக்கு முழு பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் 7,500 துாய்மை பணியாளர்கள், செவிலியர்கள், துாய்மை காவலர், டேங்க் ஆபரேட்டர், மஸ்துார் மற்றும் காவலர்கள் என மொத்தம் 20,450 பேருக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் வேலுமணி வழங்கி உரையாற்றினார். 10 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், சோப்பு என 28 வகையான பொருட்களுடன் சுமார் 30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 798 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் தன்னார்வலர்களும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆளும் அதிமுகவின் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் மாவட்டங்களிலும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார். தனது சொந்த செலவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி மாவட்டம் முழுவதும் அவை சென்றுசேர உடனடி நடவடிக்கைகள் எடுத்திருந்தார். இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு முழுஉடல் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பொருட்களை அமைச்சர் வேலுமணி வழங்கியிருக்கிறார். இதற்கான நிகழ்ச்சி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது மாநகராட்சி ஊழியர்கள் 1000 பேருக்கு முழு பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் 7,500 துாய்மை பணியாளர்கள், செவிலியர்கள், துாய்மை காவலர், டேங்க் ஆபரேட்டர், மஸ்துார் மற்றும் காவலர்கள் என மொத்தம் 20,450 பேருக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர் வேலுமணி வழங்கி உரையாற்றினார். 10 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், சோப்பு என 28 வகையான பொருட்களுடன் சுமார் 30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

விழாவில் பேசிய அமைச்சர் வேலுமணி, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழிகாட்டுதலில் கொரோனா தொற்று நோயை தடுக்க பல்வேறு தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக தெரிவித்தார். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த பணியாற்றி வரும் அரசு அலுவலர்கள், மருத்துவத் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அர்ப்பணிப்புடன் உழைக்கும் அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்த அமைச்சர் வேலுமணி சுமார் 20,450 பேருக்கு முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி இருப்பதாக தெரிவித்தார். மேலும் மாவட்டத்திலிருக்கும் 8 லட்சம் பேருக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேர்ந்து இருப்பதாக குறிப்பிட்ட அவர் தனது குடும்பத்தினர் நடத்திவரும் நல்லறம் அறக்கட்டளை மூலமாக 20 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தாங்கள் விளம்பரத்துக்காக நிவாரண பணிகளை செய்யவில்லை என்றும் அதேபோல பிரச்சனை வந்தால் முதுகை காட்டி போடாமல் அவற்றை தீர்க்க ஒன்றிணைந்து பணியாற்றி வருவதாக தெரிவித்தார். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

click me!