பாஜக என்ன கொடுப்பதாக சொன்னார்களோ அதை நாங்க தர்றோம் ! ஓபனாக பேரம் பேசிய அமைச்சர் !!

By Selvanayagam PFirst Published Jul 23, 2019, 8:14 AM IST
Highlights

காங்கிரஸ் மற்றும் மஜத அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பாஜக என்ன தருவதாக சொன்னார்களோ அதை தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என அமைச்சர் டி.கே.சிவகுமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
 

காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களை பாஜக பணம் கொடுத்து வளைத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்கள் தற்போது மும்பை நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ராஜினாமா கொடுத்த எம்எல்ஏக்கள் இன்று காலை 11 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் மற்றும் மஜத அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என இரு கட்சிகளின் கொறடாக்களும் உத்தரவிட்டுள்ளனர்

இந்நிலையில் பெங்களூரு விதானசவுதாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்  டி.கே.சிவக்குமார், சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பொருந்தும் என்று  தெரிவித்தார்.இதனால் கொறடா உத்தரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அமலில் உள்ளது. 

ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. 

தகுதி நீக்கம் செய்வது குறித்து நாளை இன்று காலை 11 மணிக்கு முடிவு செய்யப்படும். இதனால் உங்களது எம்.எல்.ஏ. பதவியை நீங்கள் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) காப்பாற்றி கொள்ளலாம். 

உங்களை (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) தகுதிநீக்கம் செய்வதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. ஒருவேளை உங்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என்றால் மும்பை, கோவாவில் இருந்தாலும் கூட அரசியலமைப்பு புத்தகத்தை படியுங்கள் என சிவகுமார் தெரிவித்தார்.. 

உங்களை பாஜகவினர் பாதை மாற்றுகிறார்கள். பாஜகவில்  சேர்ந்தால் என்ன கிடைக்குமோ? அதை நாங்கள் கொடுக்கிறோம். நண்பர்களே, இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கை என அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

click me!