
தமிழ் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் பிரதமர் மோடி உள்ளவரை பயமில்லை என்றுதான் கூறினேனே தவிர, கட்சியை பாதுகாக்க, சின்னத்தை மீட்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருக்கும்வரை எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறினார். மேலும், எங்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் மேலிருப்பவன் பார்த்துக்கொள்வான் என்ற தொணியில் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இன்று சிவாகாசியில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, புகைப்படக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் திறந்து வைத்தனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்தார். பிரதமர் மோடி பற்றி புகழ்ந்து பேசியது குறித்தும், பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளதா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், தமிழ் வளர்ச்சிக்கும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் மோடி உள்ளவரை பயமில்லை என்றுதான் கூறினேன்.
கட்சியைப் பாதுகாக்க, சின்னத்தை மீட்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை என்றார். அதிமுக தயவால் பாஜக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.