
மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த புகாரில், ‘2011ஆம் ஆண்டு பால் மந்திரி வேட்பு மனு தாக்கல் செய்தபோது வருமான வரி வரம்புக்குள் வராதவர் எனத் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அசையும் சொத்து 18 லட்சத்து 88 ஆயிரத்து 553 ரூபாய் எனவும், அசையாத சொத்து 19 எல் 11 ஆயிரத்து 963 ரூபாய் எனவும் குறிப்பிட்டிருந்தார். அவர் மாண்புமிகுவாக பொறுப்பேற்ற பிறகு திருத்தங்கலில் 75 செண்ட் வாங்கியிருக்கிறார். அதன் மதிப்பு 8 சி ரூபாய். பிறகு தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சேர்த்த சொத்து இது. அதனால், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். விசாரிக்க ஆடர் போட்டுள்ளது கோர்ட்.
சிக்கலில் சிக்கியுள்ள மாண்புமிகு பால் மந்திரியால், முதல் மந்திரியை ரொம்பவே டென்ஷன் ஆக்கியிருக்கிறது இந்த மாண்புமிகுவின் சொத்து வாங்கிப்போட்ட மேட்டர். மூத்த மந்திரி ஒருவர் பால் மந்திரியிடம் பேசியிருக்கிறார். ‘அண்ணன் ரொம்பவே வருத்தப்பட்டாரு (எடப்பாடி). நீங்க நிலம் வாங்கியதையோ, சொத்து சேர்த்ததையோ யாரும் தப்புன்னு சொல்லவே இல்லை. அதை இப்படி ஊருக்கே தெரியுற மாதிரி உங்க பேருலயா வாங்குவீங்க என்றுதான் அண்ணனுக்கு வருத்தம். இப்போ உங்களால் எல்லா மந்திரிகளுக்குமே சிக்கல் வரும். ஒவ்வொரு ஊருலயும் இருக்கிற யாராவது ஒருத்தர் இதேபோல எல்லோரைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பிச்சு கோர்ட்டுக்குப் போனால் நம்ம நிலமை என்ன ஆகுறது? தேவையில்லாத சிக்கலை நீங்களே உருவாக்கிகிட்டீங்க. நமக்கு இருக்கிற பிரச்னையில் இது ஒரு புது பிரச்னையா ஆரம்பிச்சிருக்கு...’ என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு பால் மந்திரியோ, ‘எனக்கு இப்படி ஆகும்னு எப்படி தெரியும்? அதுவும் இதெல்லாம் மம்மி இருக்கும்போதே வாங்கிட்டேன். இப்போ என்ன செய்யட்டும் சொல்லுங்க?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த மந்திரி, ‘யாரு இருக்கும்போது தப்பு செஞ்சாலும் தப்பு தப்புதானே... இப்போ இருக்கிறவங்க தலைதானே அதுல உருளும். லஞ்ச ஒழிப்புத் துறை உங்க மேல தப்பு இருக்கு என்பதை நிருபிச்சுட்டா, உங்களை மந்திரி சபையில இருந்து நீக்கித்தான் ஆகணும். அவங்க உண்மை இருப்பதைச் சொல்லி அதன் பிறகு உங்களை நீக்குவதைவிட, இரண்டு ஐடியா இருக்கு. ஒன்று, நீங்களாகவே உங்கள் மீது போட்ட பழிக்காகப் பதவியை ரிசைன் செய்வது. இரண்டாவது, முதல்வராகப் பார்த்து உங்களை மந்திரி சபையிலிருந்து நீக்குவது. இது இரண்டுல ஒன்றை செஞ்சுதான் ஆகணும். அதைத்தான் அண்ணன் உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க...’ என்று சொன்னாராம் அந்த மந்திரி.
இதனால் கடுப்பான பால் மந்திரி ‘கட்சியிலயே நான் மட்டும்தான் லஞ்சம் வாங்கின மாதிரியும், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துட்ட மாதிரியும் நீங்க எல்லோரும் சொல்றது வேடிக்கையாக இருக்கு...’ என்று பால் மந்திரி சிரித்திருக்கிறார். ஆனால், அந்த மூத்த மந்திரியோ, ‘கட்சி நல்லதுக்காகத்தான் இதைச் செய்யறோம். தனிப்பட்ட முறையில் உங்க மேல எந்தக் கோபமும் யாருக்கும் கிடையாது...’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.