அண்ணாமலைக்கு எல்லாம் பயப்படத் தேவை இல்லை. அவர் புதிதாக பா.ஜ.க-வில் தலைவராகி இருக்கிறார். அவர் மக்களிடம் பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்று பேசுகிறார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘ அரசு அலுவலர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரை அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதையே குறிக்கோளாக கொண்டு ஆர்வத்துடன் பணியாற்றுபவர்கள். அரசு எந்த திட்டங்களை அறிவித்தாலும் அதை மக்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்க்கின்ற பொறுப்பு அரசு அலுவலர்களுடையது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் குறித்த தேதியை அறிவித்தவுடன் அக்காலகட்டத்திற்குள் விழாவை சிறப்புற மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றிய அனைத்து அலுவலர்களையும் நேரில் பார்த்து, பாராட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளேன். பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி உள்ளேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து அலுவலர்களுக்கும் நான் உறுதுணையாக இருந்துள்ளேன்.
கருணாநிதியிடம் பாடம் கற்றவர்கள் நாங்கள். அரசு அதிகாரிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை எங்களுக்கு எடுத்துரைத்தவர் கருணாநிதி. அரசு அலுவலர்களின் செயல்களால் தான் ஆட்சிக்கு பாராட்டு கிடைக்கும். எனவே அரசு அலுவலர்களுக்கு எப்போதும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்’ என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘அண்ணாமலைக்கு எல்லாம் பயப்படத் தேவை இல்லை. அவர் புதிதாக பா.ஜ.க-வில் தலைவராகி இருக்கிறார். அவர் மக்களிடம் பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்று பேசுகிறார். தி.மு.க எதையும் சமாளிக்கும் வலுவான கட்சி. நாங்கள் சந்திக்காத எதிர்ப்பா? மிசாவையை எதிர்த்த இயக்கம் இது. இதற்கெல்லாம் தி.மு.க ஒருபோதும் பயப்படாது” என்று காட்டமாகப் பேசினார். மேலும் செய்தியாளர்கள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பியதுபோது, “அவர் தொடர்பான கேள்விகளை விட்டுத்தள்ளுங்கள். வேறு எதாவது கேளுங்கள்’ என்று கூறினார்.