பறையிசை கேட்டு குதூகலித்து குத்தாட்டம் போட்ட தமிழக அமைச்சர்..! வைரலாக பரவும் வீடியோ..!

By Manikandan S R SFirst Published Oct 16, 2019, 12:40 PM IST
Highlights

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கருப்பணன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் காலியாக இருக்கும் விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திமுக, அதிமுக மற்றும் நாம்தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் வெற்றி என்பது ஆளும் கட்சிக்கு மிகவும் அவசியம் என்பதால் அமைச்சர்கள் அனைவரும் இரு தொகுதிகளிலும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பாக முத்தமிழ்செல்வன் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து பேச விக்கிரவாண்டியில் அதிமுக முன்னணி தலைவர்கள் பலர்  பிரச்சாரத்தில் இருக்கின்றனர். 

இந்த நிலையில் விக்ரவாண்டி தொகுதியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்மேடு ஊராட்சி பகுதிக்கு அவர் வந்தார். அந்தப் பகுதியில் இருக்கும் அதிமுகவினர் சார்பாக அவரை வரவேற்கும் விதமாக பறையிசை இசைக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்த இசையைக் கேட்டு உற்சாகமடைந்த அமைச்சர் கருப்பண்ணன் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென சாலையில் நடனம் ஆட ஆரம்பித்தார்.

அதைப்பார்த்த தொண்டர்களும் பொதுமக்களும் திகைத்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். அங்கிருந்த தொண்டர்கள் சிலர் அமைச்சரோடு சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். சில நிமிடங்கள் நடனமாடிய அவர் பிறகு அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அமைச்சர் நடனமாடும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

click me!