
திருவாரூர் மாவட்டம் கீழவலச்சேரியை சேர்ந்தவர் எஸ்.வி.எஸ். குமார். இவர் உச்சநீதிமன்றத்தில், தமிழக அமைச்சர் காமராஜ் மீது புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். சென்னை மயிலாப்பூர் சிருங்கேரிமட சாலையில் ஒரு வீடு வாங்கினேன். அந்த வீட்டின் உரிமையாளர் வீடு காலி செய்வதற்கு அவகாசம் கோரினார். அவர் கேட்டு கொண்டபடி அவருக்கு அவகாசம் கொடுத்தேன்.
ஆனால் அவர் வீட்டை காலி செய்யவில்லை. அதன் பிறகு அவரை வீட்டில் இருந்து காலி செய்வதற்காக நீதிமன்றத்தை அணுக முயன்றபோது வக்கீல் ராமகிருஷ்ணன் என்பவரை சந்தித்தேன்.
இதுபோன்று வீடு காலி செய்வது தொடர்பாக நாங்கள் ஒரு குழுவாக செயல்படுகிறோம் என அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரது உறவினர் என்று அதிமுக பிரமுகர் காமராஜை அறிமுகம் செய்ததார். அவர்கள், வீட்டை காலி செய்வது தொடர்பாக முதலில் ரூ.10 லட்சமும், பிறகு ரூ.5 லட்சம் கேட்டனர்.
அவர்கள் கேட்டத் தொகையைக் கொடுத்தேன். ஆனால் வீட்டைக் காலி செய்ய அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவாக காமராஜ் வெற்றி பெற்று அமைச்சர் ஆனார். காமராஜ், என்னை ஏமாற்றி மோசடி செய்ததை அறிந்தேன்.
இதுகுறித்து கடந்த 2015ம் ஆண்டு மன்னார்குடி டிஎஸ்பியிடம் புகார் அளித்தேன். அவர் என்னிடம் இருந்து அனைத்து உண்மையான ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு என்னை மிரட்டினார்.
இதையடுத்து காமராஜும், ராமகிருஷ்ணனும் எனது வீட்டுக்கு ரவுடிகளை அனுப்பி என்னைத் தாக்கினர். கொலை செய்துவிடுவதாக மிரட்டிச் சென்றனர். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்தால், வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.
எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் காமராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா, குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும் என எச்சரித்தார்.
மேலும், இந்த வழக்கை வரும் 3ம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதாக கூறி, ஒத்தி வைத்தார்.