
கட்சியில் 16 பேரை காப்பாற்ற முடியாத கமல் ஹாசன், நாட்டை எப்படி காப்பாற்றப் போகிறார் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியபோது, முக்கிய பிரமுகர்களாக உயர்மட்டக்குழுவில் நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் வழக்கறிஞர் ராஜசேகர். மேலும் நடிகை ஸ்ரீபிரியா, நாசரின் மனைவி கமீலா உட்பட 16 பேர் இதில் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வழக்கறிஞர் ராஜசேகர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த ஆறு மாதங்களாக கட்சி உருவாக பாடுபட்டேன், ஆனால் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை செய்ய முடியாத காரணத்தால், தான் விலகுவதாக கூறியிருந்தார். வழக்கறிஞர் ராஜசேகரின் கருத்தைக் ஏற்றுக் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், அவரை விடுவிப்பதாக கூறியிருந்தார்.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து பேசும்போது, உயர்மட்டக் குழு உறுப்பினர்களைக் கட்டிக்காக்க் முடியாத கமல், ஒரு நாட்டை எப்படி காப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். மேலும், கச்சத்தீவை காவு கொடுத்தது திமுகதான் என்றும் அதன் உரிமையை விட்டுக் கொடுத்தது திமுக தான் என்றும் குற்றம் சாட்டினார்.
மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்களைக் கட்டிக்காக்க முடியாத கமல் ஹாசன், நாட்டை எப்படி நிர்வகிக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார். உயர்மட்ட குழு உறுப்பினர் ஸ்ரீபிரியாவும் விலகப் போவதாக செய்தி வருகிறது. உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் 16 பேரை காப்பாற்ற முடியாத கமலால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும். பூனை பூனைதான்; யானை யானைதான் என்று கிண்டலாக குறிப்பட்டார்.
தமிழகத்தில் ஜனநாயகம் இருப்பதால்தான் போராட்டம் நடத்தப்படுகிறது. போராட்டம் வன்முறை என்ற அளவை தாண்டக் கூடாது. அது தாண்டும்போதுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.