
தாங்கள் கோவிலாக மதிக்கும் ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனைக்கு சசிகலாவும் அவரது குடும்பமும்தான் காரணம் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்றிரவு திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் பின்னணியில் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இருப்பதாகவும் இந்த துரோகத்திற்காக அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் பதிலளித்தாக வேண்டும் எனவும் தினகரன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒன்றரை கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவரது வீட்டை கட்சியினர் கோவிலாக மதித்து வணங்கி வருகிறோம். கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டிருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
ஜெயலலிதா வீட்டில் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்ததுதான் இந்த சோதனைக்கு காரணம். போயஸ் கார்டன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு முழுமுதற் காரணம் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர்தான் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.