நிர்மலா சீதாராமன் சொன்னதை வழிமொழிகிறேன்..! திடுக்கிட வைக்கும் திண்டுக்கல் சீனிவாசன்..!

First Published Nov 19, 2017, 2:54 PM IST
Highlights
minister dindigul srinivasan endorses nirmala sitaraman


ராமேஸ்வரம் மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் சுடவில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களைத் தாக்குவதையும் கைது செய்வதையும் இலங்கைக் கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படைதான் அச்சுறுத்தலாக இருந்த நிலையில், கடந்த 13-ம் தேதி நடந்த சம்பவம் மீனவர்களிடையேயும் தமிழக மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

கடந்த 13-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அந்தோணி பிச்சை மற்றும் ஜான்சன் ஆகிய 2 மீனவர்களும் காயமடைந்தனர். துப்பாக்கியின் தோட்டாவையும் மீனவர்கள் காண்பித்தனர்.

தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல்படையே துப்பாக்கியால் சுட்ட சம்பவம், மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 4 நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்தம் நடத்தினர். பின்னர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உள்ள பாதிக்கப்பட்ட மீனவர்களை இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடைபெறாது என உறுதி அளித்தனர்.

இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீனவர்கள் தங்களை சுட்டதாக காட்டிய தோட்டா, இந்திய கடலோர காவல்படையினுடையது அல்ல. எனவே மீனவர்களை சுட்டது இந்திய கடலோர காவல்படை அல்ல. அதேநேரத்தில் மீனவர்கள் சுடப்பட்டதை மறுக்கமுடியாது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். 

அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு மீனவர்களும், மீனவ சங்கங்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.

இந்நிலையில், நிர்மலா சீதாராமன் சொன்னது சரிதான். மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. மீனவர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துவரும் மீனவர்கள், அவரின் கருத்தை வழிமொழிந்துள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் கண்டனங்களை தெரிவிக்கின்றனர்.

மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வுகாண அமைச்சர்களே, தட்டிகழிக்கும் விதமாக அலட்சியமாக பதில் சொல்வது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

click me!