
காவிரி விவகாரத்தில் திமுக மீதான அமைச்சர் சி.வி.சண்முகத்தின் விமர்சனத்துக்கு திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கடலூர் மஞ்சக்குப்பத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, காவிரி விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன? அப்போது ஒன்றும் செய்யாமல், இப்போது நாடகம் நடிக்கிறீர்கள். காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தந்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தான். நடுவர் மன்றம் அமைக்க திமுக எடுத்த நடவடிக்கை என்ன? அதை சொல்லிவிட்டால், நாங்கள் ஒருபக்க மீசையை எடுத்துக்கொள்கிறோம் என ஆக்ரோஷமாக பேசினார்.
அமைச்சரின் பேச்சுக்கு பதிலளித்துள்ள திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், காவிரி விவகாரத்தில் திமுக எடுத்த நடவடிக்கைகளை கூறினால், அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு பக்க மீசையை மட்டுமல்லாமல், மொட்டையும் அடிக்க வேண்டிய நிலை ஏற்படும் ஏனென்றால் காவிரி விவகாரத்தில் அந்தளவிற்கு அதிமுக துரோகம் செய்துள்ளது என்று பதிலடி கொடுத்தார்.