கட்டாயம் கால அவகாசம் வழங்கப்படும்... 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன நல்ல செய்தி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 31, 2021, 10:59 AM IST
Highlights

​12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்பு மாணவர்கள் படிப்பதற்காக கால அவகாசம் நிச்சயம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார்.
 

கொரோனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா கட்டுக்கடங்னாத வேகத்தில் கொரோனா பரவியதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக வாட்ஸ்ஆப் மூலம் அலகுத் தேர்வுகளை  நடத்த உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. 

தற்போது கொரோனா பாதிப்பு நிலவரம் உச்சத்தில் இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. மேலும் 10ம்  வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். 

+2 பொதுத்தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்றும், அதற்கான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர் ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கட்டாயம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உரிய கால அவகாசம் கொடுக்கப்படுமா? என்ற சந்தேகத்திற்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  “12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு முன்பு மாணவர்கள் படிப்பதற்கு நிச்சயமாக போதிய அவகாசம் வழங்கப்படும்” என்றார்.

click me!