இது அடங்கிப்போற அரசு இல்ல... ஸ்டாலினுக்கு நிரூபித்து ஏழை மாணவர்களின் வயிற்றில் பால்வார்த்த எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Oct 30, 2020, 1:20 PM IST
Highlights

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு சாத்தியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஏழை மாணவர்களின் வயிற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பால் வார்த்திருக்கிறார்.
 

’அரவணைக்கவும் தெரியும்; அதிரடியும் தெரியும்...’என மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்திருக்கிறது முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு. 

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியிட்டிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு, எந்நேரமும் அரசை விமர்சிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினே பாராட்டு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளால் மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாகிவிட்டது. எனினும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வில் சமநிலையற்ற போட்டி நிலவி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவு பெருமளவில் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

ஏழை அரசுப் பள்ளி மாணவர்களின் பாதிப்புகளை உணர்ந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இதற்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்தினார். மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முதல்வரும் அதன் பின்னர் 5 அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்து உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் தர வலியுறுத்தினர்.

ஏறத்தாழ 40 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ஆளுநரிடமிருந்து இன்னமும் ஒப்புதல் கிடைக்கவில்லை. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டது. அவ்வளவுதான்! திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வானத்திற்கும், பூமிக்குமாகக் குதிக்க ஆரம்பித்தன. ஆளுநரிடம் அடங்கிப் போகும் அரசு என தமிழக அரசை விமர்சித்தன. மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவ கல்வி இயக்குனர், கூடுதல் இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் எடப்பாடி, ‘சமூக நீதி காக்கவும், அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படித்து, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற, ஏழை மாணவ - மாணவியரின், மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவும், அவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது’ என பெருமிதம் பொங்க கூறியுள்ளார்.

இந்த அரசாணை குறித்து உயரதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘’7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆரம்பம் முதலே முதல்வர் தனி அக்கறை காட்டி வருகிறார். இந்த அரசாணை சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி  தயாரிக்கப்பட்டிருக்கிறது. யாரேனும் நீதிமன்றம் சென்றால் கூட பாதிப்பு ஏற்படாத வகையில் மிகுந்த கவனத்துடன் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒருவேளை உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தந்துவிட்டால் இந்த  அரசாணை அவசியமற்றதாக ஆகிவிடும். எப்படியோ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு சாத்தியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஏழை மாணவர்களின் வயிற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பால் வார்த்திருக்கிறார்.
 

click me!