
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வதந்திகள் பரவிய நிலையில், இது தொடர்பாக பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனைத் தொடர்ந்து பீகார் மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து ஆராய அதிகாரிகள் குழு தமிழகம் வந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தி பேசியதால் 12 பேர் கழுத்தறுத்து கொலை? வதந்தி பரப்பி உ.பி. இளைஞருக்கு எதிராக அதிரடி
அந்த பதிவில், “வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இதற்காகதான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு, நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம்.
ஆனால், அதனை தி.மு.க. அரசு காதில்வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்த விவகாரம் மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகாவது, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.