எம்.ஜி.ஆருக்குக் கூட இந்த துணிச்சல் இருந்திருக்குமா..? சூறாவளியாய் கிளம்பி தமிழக அரசியலை சுழற்றியடிக்கும் ரஜினி..!

By Thiraviaraj RMFirst Published Jan 22, 2020, 3:43 PM IST
Highlights

 சட்டப்படி மல்லுக்கட்டினால் எழுபதாண்டு கால மொத்தத் தேரையும் இழுத்துத் தெருவில் விட்டுவிடுவார் என்பதை திராவிட கும்பல் நன்கு அறிவர்.

எம்.ஜி.ஆர் கூடத் துணியாத, தயங்கிய செயலைத் தமிழகத்தில் செய்யத் துணிந்து விட்டார் ரஜினி. சமூகவலைதளங்கள், பத்திரிக்கை செய்திகள், தொலைக்காட்சி ஊடகம் என ஒட்டுமொத்த மீடியாவும் அலறுகிறது. திமுகவில் இருந்த காலத்திலேயே இந்த கருஞ்சட்டை கூட்டத்தில் ஒட்டியும் ஒட்டாமலும்தான் தனது அரசியலை முன்னெடுத்தார் எம்.ஜி.ஆர்.

பெரியாரையும் திமுக, திகவின் இந்து மத எதிர்ப்பு அராஜக செயல்களையும் பெரியளவில் எதிர்க்காமல் இலைமறைக் காயாகவே தனது இறை நம்பிக்கையை நிறுவினார். காரணம், தமிழகத்தின் அடியாழம் வரை பாய்ந்திருந்த இவர்களின் வேர் அப்படி. நடு நடுவே எதிர்த்துப் பேசிய ஒரு சிலரும் காவி நிறம் பூசப்பட்டு, சாதி முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டனர். இன்றோ, தாங்கள் அப்படிச் செய்யவே இல்லையென பம்முகிறார்கள் கருஞ்சட்டைகள். பொய் என்றார்கள், ஆதாரம் குவிந்தது. 

மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்கள், எதிர்பாராத அதிர்ச்சியாக 'முடியாது' என பதில் வருகிறது. அதை விட முக்கியம், தமிழகம் இதை இருகரம் கூப்பி வரவேற்கிறது. அன்று குரல் கொடுக்க முடியாத பலர் இன்று காலத்தின் சாட்சியாக ஒவ்வொருவராக வெளிவருகிறார்கள். இவை அத்தனையும்  தமிழகத்திற்கு புதிது. இதுநாள் வரை இது திராவிட நாடு என முழங்கியவர்கள் இன்று எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அலைந்து கொண்டிருக்கிறார்கள். போராட்டம், மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து என்றே பழகியவர்கள் இன்று சட்டப்படி கோர்ட்டுக்கு போவேன் என விம்மல் வெளியில் தெரியாமல் அறிவிக்கிறார்கள். 

உடனே அதிரடியாக, 'ரஜினிக்கு ஆதரவாக சட்டப்படி எதிர்கொள்ளத்தயார்' என சுப்ரமணிய சுவாமி களமிறங்குகின்றார். அவரிடம் சட்டப்படி மல்லுக்கட்டினால் எழுபதாண்டு கால மொத்தத் தேரையும் இழுத்துத் தெருவில் விட்டுவிடுவார் என்பதை திராவிட கும்பல் நன்கு அறிவர். தனது முதற் போர்முரசைக் கொட்டி, தமிழகத்தில் புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறார் ரஜினி. 'அவர் பேசியது வெறும் 3, 4 வரிகள்தான், இதற்கே இப்படி. இன்னும் கட்சி, அறிவிப்பு, தேர்தல், பிரச்சாரம் என நிறைய இருக்கிறது, காத்திரு பகையே' என ரஜினி ரசிகர்கள் கொக்கரிக்கிறார்கள்.

 

எல்லா மதத்திற்கும் பொதுவான, எல்லா நம்பிக்கைகளையும் மதிக்கின்ற, நேர்மையான, ஊழலற்ற தலைவராக ஒருவர் தமிழகத்தில் வருவார் என்பதையே கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத நிலையில்தான் தமிழகத்தை வைத்திருந்தனர். இன்று அது நிஜத்தில் அரங்கேறுகிறது. 'ஆமாம்டா, நான் ஆன்மிகவாதிதான், நான் முன்னெடுப்பது நேர்மையான ஆன்மிக அரசியல்தான், இனிமேல் இங்கே இப்படித்தான்' எனத் 'தாழ்மையோடு' மாநிலம் அதிர முழங்குகிறார் ரஜினி’’என தனது முகநூல் பக்கத்தில் கார்த்திக் என்பவர் பதிவிட்டுள்ளார். 
 

click me!