
கொறடா உத்தவை மீறி வாக்களித்ததால் நடவடிக்கை பாய்ந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை என ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுக அணி இரண்டாக பிரிந்ததையடுத்து ஓ.பி.எஸ்க்கு பல்வேறு எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் சசிகாவுக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏக்கள் தொகுதி பக்கம் வராமல் கூவத்தூரில் சொகுசாக தங்கி இருந்ததால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
அதில் பலருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வருவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிகின்றன.
இந்நிலையில், கொறடா உத்தவை மீறி வாக்களித்ததால் நடவடிக்கை பாய்ந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை என ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் தெரிவித்துள்ளார்.
காரமடை அருகே ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஓ.கே.சின்னராஜ். இவர் பி.யு.சி வரை படித்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.2-வது முறையாக மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். கட்சியில் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் தனது தொகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டி பகுதியில் தமிழக அரசு சார்பில் நடைபெற்று வரும் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாமை ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.கே.சின்னராஜ் கூறியதாவது:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது பதவியேற்றுள்ள அரசு ஒரு கானல் நீர் போன்றது.
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது தி.மு.க உறுப்பினர்கள் நடந்துக்கொண்ட விதம் அவர்களது சொந்த ஆதாயத்திற்காக நிகழ்த்தப்பட்டது.
ஓ.பி.எஸ் தலைமையில் நாங்கள் மறைமுக வாக்கெடுப்பு கேட்டது அ.தி.மு.கவும் அதன் அரசும் ஒரு குடும்பத்தின் கட்டுபாட்டிற்குள் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில்தான்.
அதிமுக சட்டமன்ற கொறடாவின் உத்தரவை மீறி நான் மாற்றி வாக்களித்துள்ளேன். அதற்காக சபாநாயகர் என் மீது நடவடிக்கை எடுப்பதை பற்றி கவலையில்லை.
நான் என் மனசாட்சிப்படி மக்கள் கருத்திற்கேற்ப நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். உண்மை வென்றே தீரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.