அதிமுக... பாமக... தேமுதிக... பாஜக... கொங்கு ஈஸ்வரன்... உறுதியானது மெகா கூட்டணி..!

By Vishnu PriyaFirst Published Jan 10, 2019, 3:01 PM IST
Highlights

இந்தியாவின் ஆதரவை இழந்த மோடியின் பி.ஜே.பி.யும்! தமிழர்களிடம் நம்பிக்கையை இழந்த எடப்பாடியின் அ.தி.மு.க.வும் இணையும் கூட்டணியில் யாரும் சேரமாட்டார்கள், இருவரும் தனித்து நின்று தோற்றுப் போவார்கள்! என்று வாய் வலிக்க திட்டிக் கொண்டிருந்தன எதிர்க்கட்சிகள். ஆனால் இன்று சூழல் மாறிவிட்டது, ஒரு மெகா கூட்டணிக்கு தயாராகிவிட்டது அ.தி.மு.க. 

இந்தியாவின் ஆதரவை இழந்த மோடியின் பி.ஜே.பி.யும்! தமிழர்களிடம் நம்பிக்கையை இழந்த எடப்பாடியின் அ.தி.மு.க.வும் இணையும் கூட்டணியில் யாரும் சேரமாட்டார்கள், இருவரும் தனித்து நின்று தோற்றுப் போவார்கள்! என்று வாய் வலிக்க திட்டிக் கொண்டிருந்தன எதிர்க்கட்சிகள். ஆனால் இன்று சூழல் மாறிவிட்டது, ஒரு மெகா கூட்டணிக்கு தயாராகிவிட்டது அ.தி.மு.க. 

விஷயம் இதுதான்....தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பி.ஜே.பி. ஏற்கனவே இருக்க, இப்போது பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. இரண்டும் இணைவது உறுதியாகிவிட்டது என்று தகவல். இவர்களோடு கொங்கு ஈஸ்வரனின் பார்ட்டியும் கைகொடுக்க, மேலும் சிறு கட்சிகள் சிலவும் இணைகின்றனவாம். ஆக மொத்தத்தில் மெகா கூட்டணி தயார் என்கிறார்கள். 

’நாம் இருவர் மட்டும் இருந்தால் சரியாக இருக்காது, வலுவான சில கட்சிகளை இழுத்தே தீர வேண்டும்! அதற்கான வேலைகளை செய்யுங்கள்.’ என்று அ.தி.மு.க.வுக்கு டெல்லி லாபி கட்டளையிட்டிருந்தது. இதைதொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இரு கரங்களான வேலுமணி, தங்கமணி இரு அமைச்சர்களும் சில ஸ்கெட்ச்களைப் போட்டனர். அதை முதல்வரின் ஒப்புதலோடு, டெல்லிக்கு கொண்டு சென்றும் ஒப்படைத்தனர். அதைப் பார்த்துவிட்டு சில திருத்தங்களோடு அப்ரூவலை கொடுத்தது டெல்லி. அதன்படிதான் இதோ கூட்டணி அமைகிறது! என்கிறார்கள்.

 

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தது. இதனால் இரு கட்சிகளும் பயனடைந்தன. ஆனால் ஒன்றாய் பயனிக்காமல் ஈகோ பிரச்னையில் பிரிந்தனர். இந்நிலையில், தற்போது  அரசியலில் பெரும் சரிவை சந்தித்து கிடக்கும் தே.மு.தி.க.வை அ.தி.மு.க. தரப்பே அணுகியது. இப்போது அங்கே முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர், கழக பொருளாளரான பிரேமலதாதான். கேப்டனிடம் கலந்து பேசினார் பிரேமா, அப்போது ‘கூட்டணி இல்லாம தேர்தலை சந்திக்க முடியாது. தி.மு.க. கூட நமக்கு சரியா வராது. ஆக நமக்கு இருக்கிற வாய்ப்பு இது ஒண்ணுதான். அந்தம்மாவோட ஈகோதானே நமக்கு பிரச்னை, ஆனால் இவங்க யார் கூடவும் நமக்கு சிக்கலில்லையே. நம்ம கட்சிக்கான மரியாதையை சரியா தந்துட்டா, கூலா கூட்டணியில இருந்துட்டு போயிடலாம்.’ என்று அவர் விளக்க, கேப்டனும் ஓ.கே. சொல்லிவிட்டார். சுதீஷ் வழியாக பச்சைக் கொடி காட்டிவிட்டார் பிரேமலதா. 

அடுத்து பா.ம.க. தரப்பும் அ.தி.மு.க.வின் இழுப்புக்கு இணங்கி வந்துவிட்டது. கருணாநிதி இல்லாத நிலையில் ஸ்டாலினின் தலைமையின் கீழ் இயங்க ராமதாஸுக்கும் விருப்பமில்லை, அன்புமணிக்கும் இஷ்டமில்லை. பா.ம.க.வுக்கு வட மாவட்டங்களில் இருக்கும் செல்வாக்கை அ.தி.மு.க. கணித்தே இவர்கள் இழுத்திருக்கிறார்கள், அதேவேளையில் காடுவெட்டி குரு இல்லாத நிலையில் வெறுமனே அன்புமணியை மட்டும் வைத்து தனித்து தேர்தலை சந்திப்பது சரியாக இருக்காது என்று சீனியர் டாக்டர் நினைக்க, அவரும் கூட்டணிக்கு ஓ.கே. சொல்லிவிட்டார். 

அதேவேளையில் மேற்கு மாவட்டங்களிலும் சில காய் நகர்த்தல்களை செய்துள்ளனர் வேலு மற்றும் தங்க மணிகள். அதாவது என்னதான் கவுண்டர் லாபி தங்கள் கட்சிக்கு ஆதரவு என்றாலும் கூட, அந்த சமுதாயத்தை மையமாக வைத்து இயங்கும் அமைப்பை உள்ளே இழுத்துப்போட ஆசைப்பட்டனர். பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொ.மு.க. முடிந்தே போய்விட்ட நிலையில், ஈஸ்வரனின் அமைப்பு மட்டுமே ஏதோ கொஞ்சம் துடிப்போடு இருக்கிறது. தி.மு.க. கூட்டணிக்காக காத்திருந்த ஈஸ்வரனுக்கு அங்கே சில விஷயங்களில் அசெளகர்யமாம். திருமா டீம் செய்வது ஈஸ்வரனுக்கு பிடிக்கவில்லை. இதனால் டபுள் மைண்டில் இருந்த ஈஸ்வரனை வேலுமணி பெரிய ஆஃபர் கொடுத்துப் பேசி வளைத்துவிட்டார்! என்கிறார்கள். 

தலித் கட்சிகள் இல்லாமல் கூட்டணி வைத்தால் அது சமூக நீதியாகாது! என்பது தமிழகத்தில் எழுதப்படாத அரசியல் விதி. அதனால் ஏற்கனவே ஜெயலலிதா காலத்திலேயே தங்கள் கூட்டணியில் இருந்த செ.கு.தமிழரசன் பக்கம் திரும்ப, அவர் மகிழ்ந்து வந்து இணைந்திருக்கிறாராம். அருந்ததியர் வாக்குவங்கியை மையமாக வைத்த சில அமைப்புகள் என்று இன்னும் சிலரும் தயார். 

ஆக தேசத்தை ஆளும் பி.ஜே.பி.யும், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வும் இணைந்து வலுவானதொரு கூட்டணியை தமிழகத்தில் உருவாக்கிவிட்டனர், கூடிய விரைவில் இது பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகலாமாம். இந்த கூட்டணி அமைப்பின் நாயகர்கள் இரண்டு ‘மணிகள்’ தான். சில தொழில் அதிபர்களின் துணையும் இந்த மெகா கூட்டணி உருவாக்கத்தில் இருக்கிறதாம். அ.தி.மு.க. தரப்பில் விறுவிறுவென உருவான இந்த பரபர வளர்ச்சியை தி.மு.க. சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன் தரப்பு உளவுப் படை மூலம் இதை சமீபத்தில் ஸ்மெல் செய்துவிட்ட ஸ்டாலின் சற்று பதறித்தான் விட்டார்! என்றே தகவல். 
கவனிப்போம்!

click me!