
துரை வைகோவிற்கு தலைமை பொறுப்பு
1990களில் திமுகவில் முக்கிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் வைகோ, இலங்கைக்கு சென்று வந்த காரணத்தால் கட்சியில் இருந்து 1993 ஆம் ஆண்டு வைகோ நீக்கப்பட்டார். இதனால் திமுகவின் மூத்த மாவட்ட செயலாளர்கள் வைகோ பக்கம் சென்றனர். இதனையடுத்து திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை வைகோ கைப்பற்றி விடுவார் என்ற தகவல் பரவியதால் இரவு பகல் பாராமல் ஏராளமான திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயம் வாயிலில் கூடினர். ஆனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் அமைப்பை 1994 ஆம் ஆண்டு வைகோ உருவாக்கினார். தேர்தல்களில் வெற்றி, தோல்வி என மாறி மாறி கிடைத்ததாலும் வைகோவின் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவாலும் தொண்டர்கள் கடும் விரக்தி அடைந்து தாய் கழகமான திமுகவில் சென்று இணைந்தனர். இந்தநிலையில் வைகோவின் வயது முதிர்வு காரணமாக அடுத்த தலைமை யார் என்ற கேள்வி மதிமுகவில் ஏற்பட்டது. இதனையடுத்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு தலைமை பொறுப்பு வழங்கலாமா? அல்லது வேண்டாமா? என வாக்குபதிவு நடத்தினர் இதில் பெரும்பாலான தலைவர்களின் முடிவுக்கு ஏற்ப துரை வைகோவை மதிமுகவில் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு
மதிமுகவில் தலைமை பொறுப்பில் துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு ஒரு,சில மூத்த தலைவர்கள் கடும் எதிப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் சிவகங்கை மதிமுக அலுவலகத்தில் கட்சி செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சிவகங்கை மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன், வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுக கட்சியை ஆரம்பித்து விட்டு தனது வாரிசை பதவியில் அமர வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதில் 20க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகளுக்கு விருப்பம் இல்லையென்றும் தெரிவித்தார். 28 ஆண்டுகாலம் கட்சியில் உழைத்தவர்களுக்கு மதிமுக மதிப்புக் கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். எனவே திமுகவோடு மதிமுகவை இணைக்க வேண்டும் என தெரிவித்தார். இதே போல சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் மதிமுக மாவட்ட செயலாளர்களும் மதிமுகவை -திமுகவோடு இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சியில் வைகோ?
இந்தநிலையில் சிவகங்கை மாவட்ட செயலாளருக்கு செவந்தியப்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுகவினர் கட்சி அலுவலகத்தின் வெளியே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை அப்புறப்படுத்தினர். மதிமுகவை திமுகவோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருவதால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.