
பெய்ஜிங்: தென்மேற்கு சீனாவில் 133 பேரை ஏற்றிச் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் அஞ்சப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என அந்நாட்டின் பிரபர தொலைக்காட்சியான சிசிடிவியின் செய்தி தெரிவித்துள்ளது.
தெற்கு சீனாவில் குன்மிங்கிலிருந்து குவாங்சோவுக்கு 133 பயணிகளுடன் சென்ற சீன ஈஸ்டர் பேசஞ்சர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் குவாங்சி என்ற மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதை உள்ளூர் மக்கள் உறுதி செய்துள்ளனர்.
போயிங் 737 விமானம் குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புறங்களில் விபத்துக்குள்ளானது என்றும் இதனால் மலைப்பகுதியில் மோதி அது பயங்கர தீயை ஏற்படுத்தியது என்றும் உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக சிசிடிவி செய்தி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. இது குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கவில்லை விரைவில் உயிரிழப்பு மீட்பு பணிகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.