மக்கள் துயரத்தில் இருக்கும்போது மத்தியஅரசு செய்வது அக்கிரமம்.. உயர்நிலைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய மதிமுக

By Ezhilarasan BabuFirst Published Jun 25, 2020, 7:34 PM IST
Highlights

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள எச்சரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும்.

மதிமுக உயர்நிலைக்குழுக் கூட்டம் அக்கட்சியின் கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதன் விவரம் :- லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15, 2020 நள்ளிரவில் சீனப் படையினர் ஊடுருவியதால், ஏற்பட்ட இந்திய -சீன இராணுவ மோதலில், எல்லையைக் காக்கும் பணியில் உயிர்த் தியாகம் செய்த தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட 20  இந்திய வீரர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது. கொரோனா கொள்ளை நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மனிதநேயக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்டுள்ள வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்றும், காவல்துறையினரின் கொலைவெறிக்கு அக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தமிழக காவல்துறையினர் நடத்தி வரும் இதுபோன்ற பச்சைப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், இக்கொடூர நிகழ்வின் உண்மை நிலையை வெளிக்கொணர பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்திட இக்கூட்டம் வலியுறுத்துகிறது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.  அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள எச்சரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பேருக்கும் மேல் பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு உரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு ரூ.3 ஆயிரம் கோடி, பாதிப்புகளைக் கட்டுப்படுத்த ரூ. 9 ஆயிரம் கோடி சிறப்பு நிதி, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிட ரூ.4 ஆயிரம் கோடி என மொத்தம் 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரி இருந்தது. ஆனால், மத்திய அரசு வெறும் 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தது. கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. ஏனெனில் மாநில அரசுகளின் நிதி வருவாய் ஜி.எஸ்.டி. நடைமுறைக்குப் பின்னர் வெகுவாகக் குறைந்தது, அந்த நிதி ஆதாரம் முழுவதும் மத்திய அரசின் கருவூலத்தில் வெள்ளமெனப் பாய்கிறது. எனவே தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கொரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மத்திய அரசு பெட்ரோல் - டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது ஆகும்.

 

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 40 டாலர் அளவுக்கு சரிந்துள்ள நிலையிலும், பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரசு, மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகிறது. கொரோனா கொள்ளை நோயால் மக்கள் பெரும் துயரத்தில் இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பது அக்கிரமம் ஆகும். எனவே மத்திய, மாநில அரசுகள் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரிகளை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை 30 விழுக்காடு குறைக்க வேண்டும் என்று மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 
 

click me!