தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நிகழப்போகும் ஆபத்து...!! தலையில் அடித்துக் கதறும் தமிழக எம்.பி

By Ezhilarasan BabuFirst Published Jul 6, 2020, 9:57 AM IST
Highlights

குழாய் பதித்தால், குழாயின் இருபுறமும் தலா 35 அடிக்கு எந்த விவசாயப் பணியும் செய்யக் கூடாது. ஆழ்துளைக் கிணறு, பிற கிணறுகளை அமைக்கக் கூடாது. ஆழமாக வேர் விடும் மரம் நடக்கூடாது.

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- கோவை மாவட்டம், இருங்கூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்வதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ.டி.பி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ள இத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் வழியாக குழாய்களைப் பதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.ஏற்கனவே கெயில் நிறுவனம் விளைநிலங்களில் குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லும் அதே நிலங்களில் ஐ.டி.பி.எல். நிறுவனமும் எண்ணெய் குழாய் பதிக்க முனைந்து இருப்பது விவசாய நிலங்களைப் பாழ்படுத்திவிடும் என்தால் 7 மாவட்ட விவசாயிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு 2019 ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளிடம் அனுமதி பெறாமல் விளைநிலங்களில் குழாய் பதிப்பதற்கு ஐ.டி.பி.எல். நிறுவனம் அளவீடு செய்யும் பணியை தொடங்கியபோது விவசாயிகள் அதைத் தடுத்து நிறுத்தி அறப்போராட்டங்களில் ஈடுபட்டனர். 

Latest Videos

இத்திட்டக் குழாய் பதித்தால், குழாயின் இருபுறமும் தலா 35 அடிக்கு எந்த விவசாயப் பணியும் செய்யக் கூடாது. ஆழ்துளைக் கிணறு, பிற கிணறுகளை அமைக்கக் கூடாது. ஆழமாக வேர் விடும் மரம் நடக்கூடாது. கனரக இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. பாசனப் பணிக்காக குழாய் அல்லது ரப்பர் டியூப் உள்ளிட்ட எதையும் எண்ணெய்க் குழாயைக் கடந்து செல்லக்கூடாது என்றெல்லாம் ஐ.டி.பி.எல். நிறுவனம் விதிகளை வகுத்துள்ளது.மேலும் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருள்கள் சட்டம் 1962-இன்படி, எண்ணெய்க் குழாய் பதிக்கப்படும் இடங்களில் அவற்றில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விபத்துகள் நேர்ந்தாலோ நிலத்தின் உரிமையாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். இச்சட்டத்தில் 2012 இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி நில உரிமையாளர்கள் நிலத்தையும் ஒப்படைத்துவிட்டு, அதில் பதிக்கப்பட்ட குழாய்களையும் காவல் காக்க வேண்டும். விவசாயிகளின் எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தி வரும் பாரத் பெட்ரோலிய நிறுவனம், தமிழக அரசின் துணையுடன் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் சட்டம் 1962-இன் கீழ் 317 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 1300 ஏக்கர் நிலங்களை கைப்பற்றி, பயன்பாட்டு உரிமையை எடுத்துக்கொள்ள குறிப்பு ஆணை வெளியிட்டுள்ளது. 

சுமார் ஆறாயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இருமுறை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக விவசாயப் பணிகளைக்கூட தொடர்ந்து நிறைவேற்ற வழியின்றி விவசாயிகள் முடங்கி இருப்பது மட்டுமின்றி, குடும்ப வருவாய் இழப்புக்கும் ஆளாகி வரும் சூழலில், ஐ.டி.பி.எல். நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சூழலில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லா நிலையை நன்கு தெரிந்துகொண்டே பெயருக்குக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி முடித்து, இத்திட்டத்தைச் செயல்படுத்தத் துடிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். விளைநிலங்களைப் பாழ்படுத்தும் ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 

click me!