மேயர்கள் மக்கள் மூலம் நேரடி தேர்வு... கருணாநிதி, ஜெயலலிதாவை ஓவர்டேக் செய்த எடப்பாடி பழனிச்சாமி!

By Asianet TamilFirst Published Nov 12, 2019, 10:37 AM IST
Highlights

கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் சென்னை மேயர் தேர்தலையொட்டியே பெரும்பாலும் அவர்கள் முடிவுகளை எடுத்தார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதைப் பற்றி கவலைப்படாமல் மேயரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் சென்னையில் அதிமுக மோசமாகத் தோல்வியடைந்த நிலையிலும் நேரடியாக மக்கள் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது ஆச்சரியம்தான்!

மேயரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதா அல்லது கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுப்பதா என்பதை கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சியை வைத்தே கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முடிவு செய்தனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் மூலம் தேர்வு செய்ய முடிவு செய்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.


பத்து ஆண்டுகள் கழித்து 1996-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் மேயர் பதவிகள் மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இப்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அப்போது சென்னை  மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு 2001-ல் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் மு.க. ஸ்டாலின் களமிறங்கினார். பல கட்ட பிரச்சினைகளுக்கு இடையே அந்தத் தேர்தலில் மேயராக மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.


ஆனால், மாநகராட்சியில் அதிமுக சார்பில் அதிக கவுன்சிலர்கள் தேர்வானார்கள். இதனால், மாநகராட்சியின் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மு.க. ஸ்டாலினை மேயர் பொறுப்பிலிருந்து இறக்கும் வகையில் ஒரு சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். அப்போது ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாகவும் இருந்ததால், ஒருவருக்கு ஒரு பதவி எனும் சட்டத்தைக் கொண்டுவந்தார். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு பதவியை தக்கவைத்துக்கொள்ளும் நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. அவர் எம்.எல்.ஏ. பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். இதனால், மேயர் பொறுப்பு காலியானது. ஆனால், அந்தப் பதவிக்கு மீண்டும் தேர்தலை நடத்தாமல், அதிமுகவைச் சேர்ந்த துணை மேயரான கராத்தே தியாகராஜனே பொறுப்பு மேயராக எஞ்சிய காலம் பதவியில் இருந்தார்.


2006-ம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேயர் பொறுப்புகளை கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதற்கு சென்னை மாநகராட்சி முக்கிய காரணமாக இருந்தது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தலா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதனால், சென்னையில் மேயர் தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படவே, கவுன்சிலர்கள் மூலம் மேயரைத் தேர்வு செய்ய திமுக முடிவு செய்தது. இதனால், சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன் அடிப்படையில் திமுகவின் மா. சுப்பிரமணியன் மேயரானார்.


ஆனால், 2011-ல் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் மேயர் பதவியை மக்கள் மூலம் தேர்வு செய்யும் வகையில் ஜெயலலிதா சட்டம் கொண்டுவந்தார். ஏனென்றால், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே சென்னையில் திமுக வெற்றி பெற்றது. எஞ்சிய தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. எனவே, மேயர் தேர்தலை தைரியமாக எதிர்கொண்டார் ஜெயலலிதா. அந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மக்கள் மூலம் சைதை துரைசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட மா. சுப்பிரமணியன் தோல்வியடைந்தார்.


2016-ல் அதிமுக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, மேயர் பொறுப்பை கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். அதற்குக் காரணம், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருந்ததே. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறமாலேயே போனது. இந்நிலையில் தற்போதைய அதிமுக அரசு, ஜெயலலிதா ஏற்கனவே கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு மாறாக மேயரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும்வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது.


கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் சென்னை மேயர் தேர்தலையொட்டியே பெரும்பாலும் அவர்கள் முடிவுகளை எடுத்தார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதைப் பற்றி கவலைப்படாமல் மேயரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் சென்னையில் அதிமுக மோசமாகத் தோல்வியடைந்த நிலையிலும் நேரடியாக மக்கள் தேர்வு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது ஆச்சரியம்தான்!

click me!