காங்கிரஸ் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட மாயாவதி! டென்சனில் ராகுல்!

By vinoth kumarFirst Published Sep 21, 2018, 10:46 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கூட்டணி விவகாரத்தில் மாயாவதி முரண்டு பிடிப்பது காங்கிரஸ் கனவில் மண்ணை அள்ளிப்போடும் வகையிலேயே உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கூட்டணி விவகாரத்தில் மாயாவதி முரண்டு பிடிப்பது காங்கிரஸ் கனவில் மண்ணை அள்ளிப்போடும் வகையிலேயே உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிக முக்கியமான மாநிலமாக கருதப்படுவது உத்தரபிரதேசம் தான். ஏனென்றால் நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டது இந்த மாநிலம் தான். கடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்ட அமித் ஷாவின் வியூகம் மூலம் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது.

 

இதே போல அண்மையில் முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க அங்கு ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி –மாயாவதியின் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் மறைமுகமாக கூட்டணி வைத்துக் கொண்டன. இதனால் பா.ஜ.கவால் எந்த இடைத்தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை.

எனவே நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தனித்த களம் இறங்கினால் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று கட்சிகளுக்கும் தெரியும். உத்தரபிரதேசத்தில் கூட்டணி சரியாக அமையவில்லை என்றால் அது பா.ஜ.கவிற்கு சாதகமாகும் என்பதும் அந்த கட்சி தலைவர்களுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் மொத்தம் உள்ள 80 தொகுதிகளையும் பிரித்துக் கொள்வதில் மூன்று கட்சிகள் இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

கடந்த முறை பகுஜன் சமாஜ் கட்சி வென்ற இடங்கள் மற்றும் 2வதாக வந்த இடங்களை அந்த கட்சி வைத்துக் கொள்வது என்றும், இதே போல் சமாஜ்வாடி கட்சி வென்ற இடங்கள் மற்றும் 2வதாக வந்த இடங்களை அந்த கட்சி வைத்துக் கொள்வது என்றும் ஒரு முடிவெடுக்கப்பட்டது. இதே போல் காங்கிரஸ் வென்றத மற்றும் 2வது இடம் பிடித்த தொகுதிகள் அந்த கட்சிக்கும் என்றும் பேசப்பட்டன.

அதன்படி பகுஜன் சமாஜ் கட்சிக்கு 34 இடங்களும், சமாஜ்வாடி கட்சிக்கு 31 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும் கிடைக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சி கடந்த 2009 தேர்தலில் சுமார் 20 இடங்களில் வென்றதால் தங்களுக்கு மேலும் 14 இடங்கள் வேண்டும் என்றும் அதனை பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இது குறித்து பேசிக் கொள்ளலாம் என்று அகிலேஷ் யாதவ் கூறி வருகிறார். ஆனால் மாயாவதியோ பேசுவதற்கு எல்லாம் ஒன்றும் இல்லை, 2014 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தான் தொகுதிப்பங்கீடு என்று உறுதியாக கூறிவிட்டார்.

 

இதனால் கடந்த ஒரு மாத காலமாகவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்த நிலையில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க தனது தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது. இதனால் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தல் பணிகளை துவங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது. ஆனால் கூட்டணி குழப்பத்தால் தேர்தல் பணிகள் தள்ளிப்போகின்றன. எனவே தொகுதிப்பங்கீடை உடனடியாக முடிக்க மாயாவதி நிர்பந்தம் செய்கிறார்.

  

ஆனால் உடன்பாட்டிற்கு வர காங்கிரஸ் மறுக்கிறது. இதனால் தனித்து போட்டி என்று விரைவில் மாயாவதி அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் அரசியல்நோக்கர்கள். இதற்கு முன்னோட்டமாகவே தங்களுக்கு கவுரவமான தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் தேர்தலில் தனித்தே போட்டி என்று மாயாவதி வெளிப்படையாக பேசியுள்ளார். மாயாவதியின் நடவடிக்கையால் உத்தரபிரதேசத்தில் அதிக இடங்களில் வென்று மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற கனவில் மண் விழும் நிலை உருவாகியுள்ளது.

click me!