
விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்காக திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவின் இரு அணிகள், பாஜக தவிர மற்ற கட்சிகளுக்கு திமுக சார்பில் தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
திமுகவின் அழைப்பை ஏற்று அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இதனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் உறுதி செய்திருந்த நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருக்கிறது.
இதையொட்டி, திமுக சார்பில் நாளை கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது:-
"தமிழகம் வரலாறு காணாத வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணம் தொடர்கிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இப்பின்னணியில் திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.