இயற்கையோடு சேர்ந்து எஞ்சியுள்ள காலத்திலாவது மக்களின் வேதனைகளை போக்கி விரல் நீட்டி சொல்வதற்கு ஏதேனும் சாதனைகளை செய்திட விடியல் நிறுவனம் முன்வர வேண்டும்.
அள்ளிவீசப்பட்ட தேர்தல் காலத்து வாக்குறுதிகளில் கிள்ளி எடுக்கப்பட்ட அளவுக்காவது அவற்றை நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும் என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- இரண்டாண்டு கால ஆட்சியில் விடியல் ஆட்சி செய்திடாத சாதனையை இயற்கை தாமாக முன்வந்து செய்து தமிழகத்தை மகிழ்வித்து இருக்கிறது. அக்னி வெய்யில் ஆட்டத்தை கூட மாநிலம் எங்கும் பெய்து வரும் மழை குளிராக மாற்றியிருக்கிறது. மொத்தத்தில் முதலமைச்சர் வீட்டு இறை வழிபாடு அவரது ஆட்சிக்கு இயற்கையை இசைவாக்கியிருக்கிறது.
ஆனாலும் இயற்கையோடு சேர்ந்து எஞ்சியுள்ள காலத்திலாவது மக்களின் வேதனைகளை போக்கி விரல் நீட்டி சொல்வதற்கு ஏதேனும் சாதனைகளை செய்திட விடியல் நிறுவனம் முன்வர வேண்டும். குறிப்பாக அள்ளிவீசப்பட்ட தேர்தல் காலத்து வாக்குறுதிகளில் கிள்ளி எடுக்கப்பட்ட அளவுக்காவது அவற்றை நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும்.
அதைவிடுத்து சனாதனம் ஆளுநர் என வெறுப்பு அரசியலை முன்வைத்தே காலத்தை கடத்தலாம் என்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உருவாகி இருக்கும் பிளவுகள் தங்களுக்கு தொடர் வாய்ப்புகளை தந்துவிடும் எனவும்.. கனா காண்பதை மக்கள் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டால்.. அவர்கள் தங்கள் மதிநுட்ப அரசியல் மற்றும் வாக்களிப்பின் மூலம் தி.மு.க.வுக்கு எதிரான மாற்று அரசியலையும் மாற்று ஆட்சியையும் உருவாக்கிவிடுவார்கள் என்பது நிச்சயம்.
இதனை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். 1967-ல் பேராயக்கட்சி என்ற பெருமையில் மூழ்கிக் கிடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு கல்லறை கட்டிவிட்டு திராவிட ஆட்சியின் தேரோட்டத்திற்கு வடம்பிடித்த வரலாற்றை நிகழ்த்திக் காட்டியவர்கள் தமிழக மக்கள் என்பதை தி.மு.க. திரும்பிப் பார்த்து திருந்திவிடுவதும் தங்களை திருத்திகொள்வதும் நல்லது. ஏனெனில் தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்ன நாஞ் சொல்றது.. என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.