Maridhas | மீண்டும் மாரிதாஸ் கைது.! அணிவகுக்கத் தொடங்கிய வழக்குகள்.. அதிகரிக்கும் சிக்கல்..அதிர்ச்சியில் பாஜக!

By Asianet TamilFirst Published Dec 11, 2021, 10:03 PM IST
Highlights

இந்த முறை மாரிதாஸ் போர்ஜரி வழக்கில் சென்னை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வழக்கில் சிக்கி யூடியூபர் மாரிதாஸ் சிறையில் உள்ள நிலையில் இரண்டாவது வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த காலங்களில் மாரிதாஸ் மீது அளிக்கப்பட்ட புகார்கள் அணிவகுக்கத் தொடங்கியிருக்கின்றன. 

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்த நிலையில், தமிழக அரசை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த மாரிதாஸை மதுரையில் போலீஸார் கைது செய்தனர். அந்த வழக்கில் மாரிதாஸை டிசம்பர் 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மாரிதாஸ் கைதை பாஜகவினர் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தற்போது இரண்டாவது வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த முறை மாரிதாஸ் போர்ஜரி வழக்கில் சென்னை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு தனியார் செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக மாரிதாஸ் யூடியூபில் வீடியோ பதிவேற்றினார். தன்னுடைய புகாரை தொலைக்காட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாகவும் அதற்கான மின்னஞ்சலையும் மாரிதாஸ் சமூக ஊடகங்களில் பதிவேற்றினார். அப்படி எந்த பதிலையும் நாங்கள் அனுப்பவில்லை என்று மறுத்த தொலைக்காட்சி நிர்வாகம், போலி ஆவணங்களை வெளியிட்டதாக தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் மாரிதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மாரிதாஸை அழைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஆண்டே விசாரித்தனர். ஆனால், கைது எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் அந்த வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டாவது வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட விவகாரம், அவர் சிறையில் உள்ள உத்தமபாளையம் சிறைக்கு சென்று போலீஸார் தெரிவித்ததாகவும் இதேபோல அவருடைய சகோதரர் மகேஷிடமும் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட விஷயம் தெரியப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாரிதாஸை எப்படியும் வெளியே கொண்டு வர வேண்டும் என்று தமிழக பாஜகவினர் முயன்று வரும் வகையில், அடுத்த வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. எனவே. மாரிதாஸை வெளியே கொண்டு வருவதில் சிக்கல்கள் அதிகரித்துள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியின்போது மாரிதாஸ் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் தூசுத் தட்டப்படும் நிலையில், அவரை தீவிரமாக ஆதரிக்கும் பாஜகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

click me!