
பாமகவை வீழ்த்த வேண்டும் என்று எதிரிகளோடு கைககோர்த்துக் கொண்டு தோற்கடிக்கும் வேலைகளை செய்து வந்தார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுகவை காட்டமாக விமர்சித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு நிறைவேற்றி தந்ததால், அதிமுக கொடுத்த 23 தொகுதிகளை பாமக ஏற்றுக்கொண்டது,. தேர்தலில் பாமக 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால், 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து கழன்று, பாமக தனித்துப் போட்டியிட்டது. இனி தனித்து போட்டியிடு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசி வருகிறார்.
இந்நிலையில் தருமபுரியில் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று பேசினார். “ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்ணை பிரச்சாரம் முறையாக செய்தால் நமக்கு பெரும் வெற்றியைக் கொடுக்கும். திண்ணை பிரச்சாரத்தை அந்தந்த ஊர்களில் உள்ள இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை முந்தைய அதிமுக அரசு கொண்டுவந்து நடைமுறைபடுத்தியது. பெரும்பாலான சமுதாயங்கள் தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது தவறு எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற முயற்சி மேற்கொள்கின்றன.
ஆனால், தற்போதைய திமுக அரசு அதை அமல்படுத்த அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. தமிழக அரசு அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வருகிறது. எதிர் மனுதாரர்கள் தடையாணை பெற முயற்சித்து வருகிறார்கள். இனி நாம் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் மக்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால், தருமபுரி மாவட்டத்தில்தான் ஓர் அதிசயமான நிகழ்வும் நடந்தது. இதே மாவட்டத்தில்தான் ஒரு கேவலமான நிகழ்வும் நடந்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தர்மமே இல்லாமல் போனது.
பாமக தலைவர் ஜி.கே. மணி, மூன்று நாட்கள் தொகுதிக்குள்ளேயே போக முடியவில்லை. பாமகவை வீழ்த்த வேண்டும் என்று எதிரிகளோடு கைககோர்த்துக் கொண்டு தோற்கடிக்கும் வேலைகளை செய்து வந்தார்கள். இது என்ன கூட்டணியோ? பெரியார் பாணியில் சொன்னால் வெங்காய கூட்டணி. இதைத்தான் கடந்தத் தேர்தலில் பார்த்தோம்.பாமக இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு எத்தனையோ பழைய நினைவுகளைச் சொல்லலாம். பாமகவை தண்ணீர் விட்டு வளர்க்கவில்லை. இந்த இயக்கத்தை கண்ணீர் விட்டு வளர்த்தோம்.
இனி நாம் தமிழகத்தை ஆள வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 70 முதல் 80 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால் நாம் ஆட்சி செய்யலாம். இனி ஒரு விதி செய்வோம். ஒரு புது விதியை நாம் உருவாக்குவோம். இன்று பாரதியாரின் பிறந்த நாள். அந்த விதியை எந்நாளும் நாம் காப்போம்.” என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.