DMK : ’என்னால தூங்க முடியல… மரக்காணம் சேர்மன் தேர்தலில் முறைகேடு நடந்தது உண்மைதான்…’ வைரல் ஆடியோ !

By Raghupati RFirst Published Dec 1, 2021, 10:24 AM IST
Highlights

மரக்காணம் சேர்மன் தேர்தலில் முறைகேடு நடந்ததாக, அதிகாரி பேசியதாக வெளியான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தேர்தல், கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் மஸ்தான் ஆதரவு வேட்பாளர் தயாளனை எதிர்த்து, ஒன்றிய செயலாளர் கண்ணன் போட்டியிட்டதால் பிரச்னை ஏற்பட்டது. இதனால்  அதிகாரிகள் தேர்தலை ஒத்திவைத்தனர். இதையடுத்து கண்ணன், சேர்மன் தேர்தலை பாதுகாப்புடன், முறைப்படி நடத்த அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 22ம் தேதி சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. 

கண்ணன் ஆதரவாளரான திமுக விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் அர்ஜூனன், கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் தயாளன் ஆகியோர் சேர்மன் பதவிக்கு போட்டியிட்டனர். இதில், அமைச்சர் மஸ்தான் ஆதரவாளரான தயாளன் 12 ஓட்டுகள் பெற்றதாகவும், ஒன்றிய செயலாளர் கண்ணன் தரப்பைச் சேர்ந்த அர்ஜூனன் 14 ஓட்டுகள் பெற்றதாகவும் கூறப்பட்டது. பின், திடீரென 14 ஓட்டுகள் பெற்று அமைச்சர் ஆதரவாளரான  தயாளன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதனால் கண்ணன் தரப்பு ஆதரவாளர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து,  புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபோன்ற பரபரப்பான சூழலில் தேர்தல் முடிந்த நிலையில் தற்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், அர்ஜூனனிடம் போனில் பேசியதாக வெளியான ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 'நான் 35 ஆண்டு காலமாக அரசு பணியில் இருக்கிறேன். இதுவரை நான் எந்த தவறும் செய்ததில்லை. இந்த காரியத்தினால்,  என்னால் சரியாக துாங்க முடியவில்லை'எனக் கண்ணீர் விட்டு அழுதபடி குரல் ஒலிக்கிறது. இந்த ஆடியோ பேச்சு பிடிஓவுடைய குரல்தான் என அர்ஜூனனின் ஆதரவாளர்கள் ஆடியோவை சமூக வலைதளங்களில் பரவவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!