திமுக ஐடி விங்கை திசை வழி மாற்றும் மனுஷ்ய புத்திரன்...உ.பிக்களை பக்குவப்படுத்த அரசியல் பாடம்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2020, 3:04 PM IST
Highlights

தமிழ் தேசியவாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பலரும் கலைஞர் குறித்தும் திமுக குறித்தும் எவ்வளவு அவதூறுகளையும் இழிசொற்களையும் இணையத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். இதற்கு சற்றும் குறையாமல் சங்கிகளும் எழுதி வந்திருக்கிறார்கள். 

ஈழத்தமிழர்கள் தொடர்பாக யாரோ ஒருவர் சொன்ன ஒரு மோசமான வாக்கியத்திற்கு திமுக  தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளரான எம்.எம் அப்துல்லாவை பொறுப்பாக்கும்விதமாக சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் பிரச்சாரத்திற்கு எதிராக அப்துல்லா ஒரு புகாரை காவல்நிலையத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த புகார் கொடுத்தற்காக  நான் மதிக்கும் நண்பர்கள் சிலரும்கூட அப்துல்லாவை கண்டிக்கின்றர். அவர்கள் உண்மைகளை சீர்துக்கிப்பார்த்து எழுதுவதாகத் தெரியவில்லை. 

எம்.எம் அப்துல்லா நீண்டகாலமாக சமூக வலைத்தளங்களில் செயல்பட்டுவருபவர். முற்றிலும் முரண்படக்கூடியவர்களிடம்கூட பொறுமையுடனும் கண்ணியத்டனும் உரையாடுபவர். விமர்சனங்களை முன்வைக்கும்போதுகூட காழ்ப்பையோ வெறுப்பையோ காட்டாதவர். அப்படிப்பட்ட ஒருவர் ஈழத்தமிழர் தொடர்பாக ஒரு மோசமான வாக்கியத்தை எழுததத்தூண்டினார் என்றால் அந்தக் குற்றசாட்டு புனையப்பட்ட ஒரு பொய் என்பது வெளிப்படை. மேலும் அதற்கு குற்றம்சாட்டுகிறவர்களிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? ஆதாரமற்ற இந்த பொய்யை எதிர்த்து சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதில் எந்தப்பிழையும் இல்லை. தி.மு.க ஒரு அரசியல் இயக்கம். ஒவ்வொரு பிரச்சினையிலும் அதற்கு தெளிவான நிலைப்பாடுகள் உண்டு. 

அந்த நிலைப்பாடுகளை தெரிவிப்பதற்கான அதிகாரம் அதற்கென நியமிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே உண்டு. அது மட்டுமே கட்சியின் நிலைப்பாடு. இந்த நிலையில் ஒருவர் திமுக ஆதரவாளராக இருப்பதாலேயே அவர் கட்சியின் நிலைப்பாடுகளை பிரதிநித்துவப்படுத்துபவராக ஆகிவிடமாட்டார். பல சமயங்களில் இணையத்தில் திமுக ஆதரவாளர்கள் என்று கருதும் பலரும் திமுகவின் உட்கட்சி விவகாரங்களையோ வேறு சில பிரச்சினைகளில் திமுகவின் நிலைப்பாடுகளையே கடுமையாக விமர்சிப்பதும் உண்டு. கட்சி என்பது இவர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு செயல்திட்டத்தைக் கொண்ட அமைப்பு. அதுமட்டுமல்ல, நான் திமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவன். எனக்கே விவாதங்களில் கட்சியின் நிலைப்பாடுகளைத்தாண்டி எனது தனிப்பட்ட கருத்துகளையோ உணர்வுகளையோ எந்தப்பிரச்சினையிலும் வெளிப்படுத்த அனுமதி இல்லை. இப்படித்தான் ஒரு கட்சி இயங்க முடியும். இந்த நிலையில் கட்சியை அதிகார பூர்வமாக பிரதிநித்துவம் செய்யாத யார் என்ன சொன்னாலும் அதற்கு திமுகவை தாக்குவது உள் நோக்கமுடையது. 

கிளிமூக்கு அரக்கன் போன்ற பக்கங்களை நடத்துகிறவர்கள் யார் என்று தெரியாது. எப்படி கறுப்பர்கூட்ட விவகாரத்தில் திமுக அபாண்டமாக சம்பந்தப்படுத்தப்பட்டதோ அதேபோல இப்போது இந்த விவகாரத்தில்  திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அப்துல்லா சம்பந்தப்படுத்தப்படுகிறார். கறுப்பர்கூட்ட விவகாரத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் சம்பந்தமே இல்லாமல் பலிகடா ஆக்கபட்டார். இப்போது கிளி மூக்கு அரக்கன் பக்கத்தில் வந்த கடுமையான சொற்களுக்காக இஸ்லாமியரான அப்துல்லா குறிவைக்கபடுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ் தேசியவாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பலரும் கலைஞர் குறித்தும் திமுக குறித்தும் எவ்வளவு அவதூறுகளையும் இழிசொற்களையும் இணையத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். இதற்கு சற்றும் குறையாமல் சங்கிகளும் எழுதி வந்திருக்கிறார்கள். ஆனால் அறம் பேசும் அறிவுஜீவிகள் யாரும் இதை கண்டுகொண்டதில்லை. அதே சமயம் திமுக ஆதரவாளர்கள் என்று கருதப்படும் சில தனிநபர்கள் ஏற்கமுடியாத சில வார்த்தைகளை பிரயோகிக்கும்போது பொங்கி எழுந்து அதற்கு திமுகவை ஏன் குறிவைக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் வேறு எவரையும்விட ஆழமான உணர்வுகளைக்கொண்டவர்கள் திமுகவினர். அதற்காக பல்வேறு இழப்புகளை சந்தித்தவர்கள். மாநிலத்தில் ஒருமுறையும் மத்தியில் ஒருமுறையும் ஆட்சியை இழந்தவர்கள். ஈழப்போராளிகள் தமிழகத்தில் அடைக்கலம்தேடி வந்த காலத்தில் எத்தனையோ திமுகவினர் அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். கலைஞர் ஆட்சிகாலத்தில் ஈழத்திலிருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு பெரிதும் ஆதரவு அளிக்கப்பட்டது. இலங்கையில் படுகொலையில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தை கலைஞர் முதலமைச்சராக இருந்தும் போய்வரவேற்க மறுத்துவிட்டார். தமிழச்செல்வனின் மரணத்திற்கு இரங்கற்பா எழுதினார். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது திமுகவினர் சம்பந்தமே இல்லாமல் தாக்கப்பட்டனர். அவர்கள் சொத்துகள் சூறையாடப்பட்டன. சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட முண்ணனித்தலைவர்கள் பொய் வழக்கில் சிறையில் பலகாலம் வாடினர். இன்னும் வெளியே சொல்லப்படாத எவ்வளவோ துயர்ககதைகள். இதெல்லாம் நடந்தபோது இன்று இணையத்தில் திமுக வெறுப்பைக் கக்கும் விடலைகள் பிறந்திருக்கக்கூட மாட்டார்கள்.

திமுக போர்க்குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறது. ஐ.நா மன்றம் வரை சென்று குரல் கொடுத்திருக்கிறது. இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவில் இரட்டைக்குடியுரிமை வழங்கவேண்டும் என்பது திமுகவின் முக்கியக் கோரிக்கைககளில் ஒன்று. ஈழத்தமிழர் படுகொலைக்கு திமுகவை பொறுப்பாக்குவது என்பது ஜெயலலிதா உளவுத்துறை உதவியுடன் புனைந்த ஒரு கட்டுக்கதை. இந்தக்கட்டுகதையை பரப்பியவர்களுக்கு நிதி நல்கைகளை வழங்கி ஆதரவளித்தவர் சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராஜன். இந்த கட்டுகதையை ஈழத்தமிழ் ஆய்வாளர்கள் யாரும் ஏற்பதில்லை. ஈழப்படுகொலையில் சரவதேச சதி குறித்து ஏராளமான ஆய்வுகள், தரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது எதைப்பற்றியும் கவலைப்படாமல்  இந்தியாவின் சர்வதேச விவகாரங்களில் எந்த அதிகாரமும் அற்ற ஒரு மாநிலக்கட்சியை இனப்படுகொலைக்கு பொறுப்பாக்கும் கீழ்மை இங்கு தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மட்டும் தமிழகத்தில் ஈழத்தமிழர் படுகொலை தமிழ் தேசிய அமைப்புகளால் முன்னிலைப்படுத்துப்படுகிறது. அதைத்தொடர்ந்து இனப்படுகொலைக்கு திமுகதான் காரணம் என்று அதிமுகவினர் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள். இது ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்படும். அதிமுகவின் அரசியல் நலன்களுக்காக இனப்படுகொலையின் குருதியை இங்குள்ள பல தமிழ் தேசிய அமைப்புகள் ஒரு ஊறுகாயாக மாற்றிக்கொண்டிருக்கிறன. முத்தையா முரளிதரன் விவகாரம்கூட அப்படி கொண்டுவரப்பட்ட ஒன்றுதான் என்ற விமர்சனம் இருக்கிறது.  தமிழகத்தின் தேர்தல் காலங்கள் தவிர இது ஏன் இவர்களுக்கு எப்போதும் நினைவுக்கு வருவதே இல்லை? ராஜபக்சே இந்த்யாவிற்குவரும் ஒருமுறையேனும் டெல்லிவரை சென்று போராடிவிடு வரலாமே. 

திமுக தகவல் தொழில்நுட்ப அணி செய்யக்கூடிய பணிகள் மிக வெளிப்படையானவை. அது கட்சிக்கான பிரமாண்டமான  தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது. கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்கிறது. திமுக முப்பெரும் விழாக்களை இலட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சென்றுகொண்டிருப்பது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சாதனைகளில் ஒன்று.  எங்களுக்கு போலி அடையாளங்களில் யாரையும் தாக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. பொய்த்தகவல்களை பரப்புகிறவர்கள் நாங்கள் அல்ல. 

அதைச் செய்வதற்கு என்றே அதிமுக மற்றும் பா.ஜ.க ஐ.டி பிரிவுகள் இருக்கின்றன.  செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாததுபோல யார் எதைச் சொன்னாலும் அதை திமுகவுடன் சம்பந்தப்படுத்தும் இந்த கீழ்மையான எண்ணைத்தைக் கைவிடுங்கள்
எந்த ஒரு உண்மையான திமுககாரனும் ஈழத்தமிழர்கள் உணர்வுகளை புண்படுத்தும் எந்த வாக்கியத்தையும் ஒருபோதும் சொல்லமாட்டான். எங்கள் ஈழச் சகோதர்களின் கண்ணீரையும்ம் குருதியையும் துடைக்க நாங்களே முதன்மையாக நிற்போம் . 

இறுதியாக ஒரு வேண்டுகோள். திமுக ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாரும் எவரையும் இனம், சாதி, பாலின அடிப்படையில் தனிநபர் தாக்குதலில் இறங்கவேண்டாம். அப்படி திமுக எதிரிகள் செய்தால் கூட அந்த ஆயுதத்தை நீங்கள் எடுக்க வேண்டாம். திமுக ஒரு மாறுபட்ட அரசியல் பண்பாட்டைக்கொண்ட கருத்தியல் இயக்கம். திமுக ஆதரவு என்ற பெயரில் தனிநபர்களால் செய்யப்படும் தனிநபர் தாக்குதல்கள் திமுகவிற்கு எந்தப்பெருமையும் சேர்காது. என திமுக ஐடி விங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மனுஷ்யபுத்திரன் தெரிவித்துள்ளார். 
 

click me!