நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.. இதை மட்டும் மறக்காதீங்க.. பிரச்சார கூட்டத்தில் தொண்டர்களை எச்சரித்த ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Mar 18, 2021, 2:44 PM IST
Highlights

நான் உறுதியோடு சொல்கிறேன். எவ்வாறு கலைஞர் அவர்கள் சொன்னதைச் செய்தாரோ அதே போல, அவருடைய மகனும் சொன்னதைத் தான் செய்வான் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் கூட்ட நெரிசலில் இருக்கும்போது கட்டாயம் மாஸ்க் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்;- பெண்ணின் திருமணத்திற்கு உதவித்தொகை திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கருணாநிதி கொண்டுவந்தார். 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்தாலும், கருணாநிதி ஆட்சி காலத்தில் நாங்கள் செய்த சாதனைகள், திட்டங்களை பட்டியலிட்டு கூறுகிறேன். 

இதேபோல இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி தான் செய்தவற்றைப் பட்டியல் போட்டு சொல்வதற்கு தயாராக இருக்கிறாரா? ஆளுங்கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள். வாய்க்கு வந்தமாதிரி சில வாக்குறுதிகளையும் கூறியுள்ளனர். ஆனால், எது நடக்கும் எது நடக்காது என்பது மக்களுக்கு தெரியும்.

2016ல் அதிமுக கூறிய வாக்குறுதிகளின் நிலை என்ன என்பது குறித்து முதல்வர் கூறுவாரா? பொது இடங்களில் வைபை வசதி, 10 லட்சம் வீடுகள் கட்டி தருவது, மோனோ ரயில், அனைவருக்கும் செல்போன், அரசு கேபிள் ரூ.70ஆக குறைத்தல், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.25 ஆக குறைத்தல் போன்ற வாக்குறுதிகளை அளித்தனர். இதெல்லாம் செய்தார்களா? 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் பழனிசாமி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாமல் நிதி இல்லை என காரணம் சொல்லிவிட்டு, தேர்தலுக்காக தற்போது அறிவித்துள்ளார்.

அதிலும் 14 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்வதாக கூறி 5 ஆயிரம் கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். மீதமுள்ள கடனை திமுக ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்யப்படும்.  நான் உறுதியோடு சொல்கிறேன். எவ்வாறு கலைஞர் அவர்கள் சொன்னதைச் செய்தாரோ அதே போல, அவருடைய மகனும் சொன்னதைத் தான் செய்வான் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் கூட்ட நெரிசலில் இருக்கும்போது கட்டாயம் மாஸ்க் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நான் வாகனத்தில் இருப்பதால் போடவில்லை. நீங்கள் தயவுசெய்து மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என வலியுறுதியுள்ளார்.

click me!