இறங்கி வாங்க கமல்! காருக்குள்ளே இருந்தால் கஷ்டம் புரியாது... உலக நாயகனை உலுக்கும் குரல்கள்

By vinoth kumarFirst Published Nov 15, 2018, 5:24 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டு பல மாதங்களாகி விட்டது இன்னமும் கமல் பேசுகிறார், பேசுகிறார், பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறார்! என்று விமர்சனங்கள் வரிசைகட்டுகின்றன அவரைப்பற்றி. திடீரென அரசியல் பரபரப்பினுள் எட்டிப்பார்ப்பதும், பின் சில நாட்கள் சினிமா, சின்னத்திரை, விருது விழா என்று கரைந்து காணாமல் போவதும் கமல்ஹாசனின் வழக்கமாக இருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டு பல மாதங்களாகி விட்டது இன்னமும் கமல் பேசுகிறார், பேசுகிறார், பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறார்! என்று விமர்சனங்கள் வரிசைகட்டுகின்றன அவரைப்பற்றி. திடீரென அரசியல் பரபரப்பினுள் எட்டிப்பார்ப்பதும், பின் சில நாட்கள் சினிமா, சின்னத்திரை, விருது விழா என்று கரைந்து காணாமல் போவதும் கமல்ஹாசனின் வழக்கமாக இருக்கிறது. 

கடந்த சில வாரங்களாக பாலிடிக்ஸிலிருந்து எஸ்கேப் ஆகியிருந்தவர், சர்கார் பட பிரச்னைக்கு கருத்து சொல்லியபடி வெளியே வந்தார். பின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராஜேந்திர பாலாஜிக்கு பொளேர் பதிலை தந்தார். கடும் வெயில் தகதகவென கொதிக்கும் தர்மபுரியிலும், சிலுசிலு காற்று ஜில்லென அடிக்கும் கர்நாடகத்தை உரசியபடி இருக்கும் கிருஷ்ணகிரியிலும் காருக்குள்ளேயே சுற்றியபடி அந்தந்த பாயிண்டுகளில் வெளியே வந்து ‘மக்களின் பிரச்னை எனக்குப் புரியும்! உங்களோடு நான்!’ என்று வழக்கமான டயலாக்குகளைப் பேசினார்.

சொகுசு காரில் சுற்றுபவருக்கும் நமது பிரச்னை எப்படித்தான் புரியும்? என்பதே மக்களின் கேள்வியாக இருந்தது. ஆனால் ‘ஆண்டவா, தலைவா, உலக நாயகா’ என்று ரசிக குஞ்சுகளின் கூச்சல்களுக்கு நடுவில் மக்களின் இந்த கேள்விகள் கமலின் காதுகளில் விழவேயில்லை.  

இந்நிலையில் குழந்தைகள் தினமான நேற்று சென்னையில் உள்ள லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளிக்கு சென்ற கமல்ஹாசன், “குழந்தைகளை வாழ்த்த நான் இங்கு வரவில்லை, அவர்களிடம் வாழ்த்து பெறவே இங்கே வந்தேன். அவர்கள் பாடிய பாடல் எனக்கு தெம்பு தருவதாக இருந்தத். ராஜபார்வை படத்தில் நடிப்பதற்காக பிரெய்லி எழுத்தையும், சைகை மொழியையும் கற்றேன். இந்தப் பள்ளிக்கு பிரெய்லி மொழியில் பயன்படுத்தும் கம்ப்யூட்டரும், பிரிண்ட்டரும் வேண்டும் என்று ஒரு மாணவி என்னிடம் கேட்டார். அது மும்பையில் இருந்து வரவழைக்க வேண்டும் என்றார்கள். நிச்சயம் அதை நான் என் சக்திக்கு ஏற்ப வாங்கி தருவேன். 

எனக்கு மக்கள் கொடுத்த புகழ் போதும். தேவைக்கு அதிகமாகவும், தகுதிக்கு அதிகமாகவும் தந்துவிட்டார்கள். இனி நான் தமிழகத்துக்கு புகழ் சேர்க்கும் வேலையை செய்ய வேண்டும்.” என்று உருகி மருகியிருக்கிறார். பார்வையற்ற குழந்தைகளையே கண் கலங்க செய்யும் வகையில்தான் இருந்தது கமலின் பேச்சு. ஆனால் தேவைக்கு அதிகமா புகழை தந்துட்டீங்க, தகுதிக்கு அதிகமா செல்வாக்கை தந்துட்டீங்கன்னு சொல்லும் கமல், காஸ்ட்லி காரை விட்டு இறங்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். சாதாரணமாக ஒரு சினிமாவில் நடிப்பதற்கே ஒத்திகை பார்க்கிறார். ராஜபார்வை படத்தில் பார்வையற்றவனாக நடிப்பதற்காக பிரெய்லியையே கற்றிருக்கிறார். அப்படிப்பட்ட சின்சியர் மனிதர், அரசியலுக்கு வந்து நல்லது செய்திட நினைக்கும் நிலையில் பிராக்டிக்கலாக மக்கள் பிரச்னையை புரிந்து கொள்ள வேண்டாமா? 

ஒரு டவுன் பஸ் பயணம் எப்படி இருக்கிறது? ஒரு அம்மா உணவக இட்லி எப்படி இருக்கிறது? ஒரு ஜென்ரல் கம்பார்ட்மெண்ட் ரயில் பயணம் எப்படி இருக்கிறது? மேட்டுப்பாளயம் முதல் ஊட்டி வரையில் மலைப்பாதையில் அரசு பேருந்து பயணம் எப்படியான தலைசுற்றலை தருகிறது, தூத்துக்குடி கடற்புரத்தில் வாழும் மக்களின் உடல் நிலை எப்படி உள்ளது? என்று அனுபவப்பூர்வமாக உணர வேண்டாமா? இதற்கெல்லாம் அவருக்கு ஏது நேரம்? எப்படி சாத்தியம்? என்று கேள்விகள் வரலாம். 

சாத்தியமே, கமல் நினைத்தால் சாத்தியம்தான். இரண்டு நாட்கள் காரில் ஒரு  மாவட்டத்தை சுற்றுவதற்கு பதிலாக தமிழகத்திலிருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும், இருப்பதிலேயே வசதி குறைவான பகுதி எது? கடினமான தொழில் மையம் எது? என்பதையெல்லாம் தேர்வு செய்து அங்கு சென்று ஒரு நாள் அளவுக்கு அங்கே தங்கியிருந்து மக்களிடம் பேசியும் பிரச்னைகளை உணரலாம். இன்னும் இன்னும் எவ்வளவோ பண்ணலாம். அதைவிட்டு, தன் உதவியாளர்கள் புடை சூழவும், பவுன்சர்கள் புடை சூழவும் ஹைஎண்டு சொகுசு காரில் நின்று கொண்டு ‘நான் உங்களில் ஒருவன்’ என்று கமல் சொல்வதை நம்பிட எவனும் இங்கே தயாரில்லை! என்பதே மக்களின் எண்ணம். எல்லாம் புரிந்த கமலுக்கு இதுவும் புரியும்! என்று நம்புவோம்.

click me!