தமிழகத்தை கஞ்சா தலைநகரமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை... அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Sep 2, 2022, 9:43 PM IST
Highlights

இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழகம் மாறியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழகம் மாறியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் போதையால் ஏற்படும் சமூக சீரழிவுகளை செய்திகளின் வாயிலாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் . முன்பு எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் உச்சத்தில் இருக்கிறது என்பது ஆபரேஷன் கஞ்சா : 1.0, 2.0, 3.0 என்று நமது காவல்துறையினரின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் காணமுடிகிறது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போதை பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்தார் . எடுத்த மூன்றாவது நாள் தமிழகத்தில் ஒரே நாளில் 273.9 கோடி ரூபாய்க்கு மது விற்று புதியதோர் சாதனையை செய்தது தமிழக அரசு . போதையை ஒழிப்பதில் தமிழக அரசின் தீவிரத்தை மக்கள் கண்டு மெய்சிலிர்த்து போன தருணம் அது. தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நடைபெற்று வரும் இந்த திறனற்ற திமுக அரசின் இயலாமையை மீண்டும் ஒரு முறை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். மது ஆலை நடத்தி வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் T.R.பாலு மற்றும் ஜெகத்ரட்சகனையும் உடன் அமர்த்திக்கொண்டு பத்திரிகையாளர்களை அமைச்சர் பொன்முடி சந்தித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். 17 ஆம் நூற்றாண்டு முதல் இயங்கி வரும் முந்த்ரா துறைமுகத்திலிருந்து தான் இந்தியாவில் அனைத்து இடங்களுக்கும் போதை பொருள் செல்வதாகவும் இந்த துறைமுகம் கடந்த 8 ஆண்டுகளில் தான் தனியார் மயமாக்கப்பட்டதை போன்றும் வாட்ஸப்பில் வரும் பொய்யான தகவல்களை ஒரு அமைச்சர் கூறுவது வேடிக்கை.

இதையும் படிங்க: "தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு" மாஸாக களமிறங்கிய சீமான்.. திருப்போரூர் முருகன் கோவிலில் நாளை அதிரடி.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று விஜயவாடா துறைமுகத்திலிருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகிறது என்றார். இதில் கொடுமை என்னவென்றால் விஜயவாடாவில் துறைமுகம் மட்டுமல்ல கடலே இல்லை என்பதே உண்மை. இப்படி வாட்ஸப்பில் வந்த வதந்திகளை பத்திரிகையாளர்களிடம் சொன்ன அமைச்சருக்கு ஒரே ஒரு கேள்வி. 1998 ஆம் ஆண்டு முதல் தனியாரிடம் இருக்கும் முந்த்ரா துறைமுகம் தான் தமிழகத்தின் போதை பொருள் புழக்கத்திற்கு காரணம் என்றால் 2021 மே மாதம் வரை ஏன் தமிழகத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ மனைவியர்கள் முதல் அனைத்து மக்களும் போதையில் தள்ளாடிக் கொண்டிருப்பது போன்ற காணொளிகளை நாம் தினமும் செய்திகளில் பார்க்கவில்லை. 2021 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்பு தமிழகம் ஏன் தலைகீழாக மாறியுள்ளது? 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் 115 கிலோ ஹெராயின் மற்றும் ATS எனப்படும் போதை பொருள் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினால் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி துறைமுகம் தனியார் துறைமுகமா? 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் மட்டும் தமிழகத்தில் 1238.84 கிலோ போதைப் பொருட்களை போதை பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்தது அமைச்சருக்கு தெரியாதா? 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 கிலோ ஹெராயின் தூத்துக்குடியில் பிடிபட்ட செய்தியை அமைச்சர் மறந்துவிட்டாரா. நீங்கள் எப்படி போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துவீர்கள்? தமிழகத்தில் போதை பொருள் விற்ற குற்றத்திற்காக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 742 பேர். டிசம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 771 பேர். டிசம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1558 பேர். 

இதையும் படிங்க: உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக ஒருசில சுயநல விஷமிகள், திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டனர்- இபிஎஸ் ஆவேசம்

திமுக ஆட்சிக்கு வந்த பின் கைது அதிகமாகிவிட்டது என்று பெருமை பட்டுக் கொள்ளும் அமைச்சர், திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் தமிழகத்தில் எட்டுத்திக்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என்பதை உணர வேண்டும். நான்கு வாரங்களுக்கு முன் 2 கிலோ கஞ்சா கடத்திய திமுக பிரமுகர் திருச்சி அருகே கைது செய்யப்பட்டார் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக உங்கள் கவனத்திற்கு முன்வைக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த வருடம் ஜனவரி மாதம் திமுக நிர்வாகி போதை பொருளுடன் ஆந்திராவில் பிடிபட்டார் என்ற செய்தி உட்பட பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பிடிபட்ட நிர்வாகி உபயோகித்த வாகனம் தூத்துக்குடியில் பதியப்பட்டதாகும். இப்படி தூத்துக்குடியிலிருந்து பல இடத்திற்கு போதை பொருட்கள் கடத்தப்படுகிறது என்று வேறு மாநிலத்தவர் குற்றம் சாட்டினால் அது தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு? கடத்தி செல்லும் நபர்களை மட்டும் கைது செய்து வரும் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, எங்கிருந்து இந்த கஞ்சா வருகிறது, அதை எப்படி முடக்குவது என்பதை ஆலோசிக்காமல் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை. தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க மத்திய அரசின் மேல் பழி போடுவதை திமுக நிறுத்தி கொள்ள வேண்டும். முதலில் திமுக அமைச்சர்கள் தாங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடி விட்ட பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். கண்துடைப்பு நடவடிக்கைகளால் மக்களை ஏமாற்றாமல் இனியாவது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

click me!