என்னுடைய கோரிக்கையை ஏற்று சென்னை, காமராஜர் சாலை, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் முழு திருவுருவச் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை உயர் கல்வித்துறை அமைச்சரின் மூலம் தெரிவித்த தமிழக முதல்வருக்கு எனது நன்றி.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை முறையாக பராமரிக்க கோரியதற்கு உரிய உத்தரவாதத்தை அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக, தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைவராக விளங்கிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் முழு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.
undefined
சிலையும், அதனைச் சுற்றியுள்ள இடமும் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஜெயலலிதாவின் சிலை பராமரிப்பின்றியும், அதைச் சுற்றியுள்ள இடம் புதர்மண்டி பாழடைந்த நிலையிலும் காணப்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி, ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு தினமும் மாலை அணிவிப்பதற்கும், சிலை மற்றும் சிலை அமையப்பெற்ற இடத்தைப் பராமரித்துப் பாதுகாப்பதற்கும் அனுமதி வழங்கிடுமாறு எனது 16-10-2021 நாளிட்ட கடிதம் வாயிலாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
எனது கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில், அரசின் சார்பில் சிலை மற்றும் நினைவகங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய முறையில் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது என்றும், இந்நேர்வில் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளிடம் வழங்கிடும் நடைமுறை இல்லாத நிலையில் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை அரசின் சார்பில் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி அளித்திருக்கிறார்.
என்னுடைய கோரிக்கையை ஏற்று சென்னை, காமராஜர் சாலை, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் முழு திருவுருவச் சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை உயர் கல்வித்துறை அமைச்சரின் மூலம் தெரிவித்த தமிழக முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.